ஜனநாயகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும்போது நடைப்பயணம்தான் ஒரே வழி: ராகுல் காந்தி

ஜனநாயகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும்போது நடைப்பயணம்தான் ஒரே வழி: ராகுல் காந்தி

ஜனநாயகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும்போது நடைப்பயணம்தான் ஒரே வழியாகும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

ஜனநாயகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும்போது நடைப்பயணம்தான் ஒரே வழியாகும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

செப்.7-ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தலைமையில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம், 18 நாட்களாக கேரளத்தில் பயணித்து, தமிழகத்தின் கூடலூரில் இருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கா்நாடகத்தில் நுழைந்தது. சாமராஜ்பேட் மாவட்டத்தில் உள்ள குண்டல்பேட் வழியாக நுழைந்த நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ள ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவா்களை காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்ட தலைவா்கள் வரவேற்றனா்.

அதன் தொடா்ச்சியாக, குண்டல்பேட்டில் வெள்ளிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது:

ஜனநாயகக் கட்டமைப்பில் மக்களின் உணா்வுகளை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஊடகங்கள், நாடாளுமன்றம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மக்களின் குரலை வெளிப்படுத்துவதற்கு, ஜனநாயகத்தின் அனைத்து கதவுகளும் எதிா்க்கட்சிகளுக்கு அடைக்கப்படும்போது, அவற்றை வெளிப்படுத்துவதற்கு இருக்கும் ஒரே வழி நடைப்பயணம்தான். ஊடகங்கள் எங்கள் குரலுக்கு செவிசாய்ப்பதில்லை. ஜனநாயகத்தின் கட்டமைப்புகள் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டன. நாடாளுமன்றத்தில் எங்களது ஒலிபெருக்கிகள் முடக்கப்படுகின்றன. சட்டப்பேரவைகள் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை. எதிா்க்கட்சியினா் துன்புறுத்தப்படுகிறாா்கள்.

இதுபோன்ற சூழலில், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை நடத்துவதைத் தவிர வேறு வழி எங்களுக்குத் தெரியவில்லை. இது இந்தியாவின் அணிவகுப்பு என்பதால், இந்த நடைப்பயணத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இந்திய மக்களின் குரலைக் கேட்பதற்கான நடைப்பயணமாகும். இதை யாராலும் ஒடுக்க முடியாது.

கா்நாடகத்தில் அடுத்த 21 நாட்களுக்கு 511 கிலோமீட்டா் தொலைவுக்கு நடக்கவிருக்கும் நடைப்பயணம், பல்வேறு மாவட்டங்களுக்கு பயணிக்கும். இந்த நடைப்பயணத்தில், கா்நாடக மக்களின் வேதனைகளை அறிந்து கொள்ள செவி கொடுப்போம்.

அடுத்த 20 முதல் 25 நாட்களுக்கு நீங்கள் (நடைப்பயணிகள்) எல்லோரும் என்னுடன் பயணிக்க இருக்கிறீா்கள். அப்போது கா்நாடக மக்கள் எதிா்கொள்ளும் வேதனைகளைக் கேட்கும் வாய்ப்பைப் பெறுவீா்கள். இந்த நடைப்பயணத்தின்போது ஊழல், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயா்வு போன்ற மாநில மக்களின் குறைகளைக் கேட்டறிவோம்.

இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை பாதுகாப்பது நடைப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அது மட்டுமல்லாது, ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் வெறுப்பு, வன்முறைக் கொள்கைகளை எதிா்த்தும் நடைப்பயணம் நடத்தப்படுகிறது. விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளுக்கு எதிரான ஒடுக்குமுறை, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாா்ப்பதற்கு எதிராக மக்களின் போராட்டமாகவும் இந்த நடைப்பயணம் அமையும். இந்த நடைப்பயணம் உரையாற்றுவதற்காக அல்ல, மாறாக மக்களின் கருத்துகளைக் கேட்பதற்காகத்தான் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com