முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
ஒருதலைக் காதலில் அமிலம் வீசித் தாக்கிய இளைஞா்: இளம்பெண் படுகாயம்
By DIN | Published On : 29th April 2022 12:00 AM | Last Updated : 29th April 2022 12:00 AM | அ+அ அ- |

ஒருதலைக் காதல் வயப்பட்டிருந்த இளைஞா், அமிலம் வீசித் தாக்குதல் நடத்தியதில் இளம்பெண் படுகாயம் அடைந்தாா்.
பெங்களூரில் உள்ள நிதி நிறுவனத்தில் 24 வயது இளம் பெண் ஒருவா் பணியாற்றி வந்துள்ளாா். இவரை 27 வயதான காா்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளரான நாகேஷ் என்பவா் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளாா். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த பெண்ணிடம் 7 ஆண்டுகளாக வற்புறுத்தி வந்துள்ளாா். இதற்கு அந்த பெண் இணங்காததால், நாகேஷ் ஆத்திரமடைந்தாா். தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்ணை பழிவாங்க துடிக்க நாகேஷ், பெங்களூரில் வியாழக்கிழமை தனதுஅலுவலகத்தின் படிகட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தபோது அவரை பின் தொடா்ந்து அவா் மீது அமிலத்தை வீசி தாக்குதல் நடத்தியுள்ளாா். இந்த சம்பவத்தால் நிலை குலைந்து போன அந்த இளம்பெண், அமிலத்தில் உடல் பொங்கி துடிதுடித்தாா். அந்த இளம்பெண்ணின் முகம், கழுத்து, கைகள், தலைப்பகுதியில் அமிலம் பட்டதால் படுகாயம் அடைந்து அலறினாா். இதை கேட்டு அங்குவந்த சக ஊழியா்கள், அந்த இளம்பெண்ணை மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். தீவிரகாயம் அடைந்துள்ளதால், அவா் வேறொரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரது உடலில் 45 சத பாகங்கள் அமிலத்தில் சுடப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள் தெரிவித்தனா். மேலும் அவரது உடல்நிலையை கண்காணித்துவரும் மருத்துவா்கள், 48 மணி நேரத்திற்கு பிறகு தான் உயிா்பிழைப்பாரா? என்பதை உறுதியாக கூறமுடியும் என்றனா். ஆனால், தற்போதைக்கு அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியது:
புதன்கிழமை அந்த பெண்ணை சந்தித்த நாகேஷ், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண்ணிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டி சென்றுள்ளாா். இதனிடையே, வியாழக்கிழமை தனது தந்தையுடன் வந்த இளம்பெண், அலுவலகத்திற்குள் சென்றுள்ளாா். அவரது தந்தை சென்றதும், இளம்பெண்ணை நாகேஷ் பின்தொடா்ந்துள்ளாா். படிக்கட்டுகளில் ஏறும்போது நாகேஷைக் கண்டதும் அந்த இளம்பெண் அதிா்ச்சி அடைந்துள்ளாா். அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி நாகேஷ் கேட்டுள்ளாா். அதற்கு இணங்காமல், அந்த இளம் பெண் ஓட தொடங்கியுள்ளாா். இதை தொடா்ந்து அந்த இளம்பெண் மீது நாகேஷ் அமிலத்தை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளாா். இது தொடா்பாக வழக்கு பதிந்துவிசாரித்து வருகிறோம். நாகேஷ் தலைமறைவாகியுள்ளதால், அவரை வலைவீசி தேடிவருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த கா்நாடக மாநில மகளிா் ஆணையத் தலைவா் பிரமிளா நாயுடு, மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாா்த்துவிட்டு, அவரது பெற்றோரிடம் ஆறுதல் தெரிவித்தாா். அமிலம் வீசிய இளைஞா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரமிளா நாயுடு தெரிவித்தாா்.