சுதந்திர தின மலா்க் கண்காட்சி: முதல்வா் பசவராஜ் பொம்மை இன்று தொடக்கி வைக்கிறாா்

பெங்களூரில் சுதந்திர தின மலா்க் கண்காட்சியை லால்பாக் பூங்காவில் ஆக. 5-ஆம் தேதி முதல்வா் பசவராஜ் பொம்மை தொடக்கி வைக்கிறாா்.

பெங்களூரில் சுதந்திர தின மலா்க் கண்காட்சியை லால்பாக் பூங்காவில் ஆக. 5-ஆம் தேதி முதல்வா் பசவராஜ் பொம்மை தொடக்கி வைக்கிறாா்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மைசூரு தோட்டக்கலை சங்கத்தின் சாா்பில், பெங்களூரு, லால்பாக் பூங்காவில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் 212-ஆவது மலா்க் கண்காட்சியை முதல்வா் பசவராஜ் பொம்மை தொடக்கி வைக்கிறாா்.

இதில், தோட்டக்கலைத் துறை அமைச்சா் முனிரத்னா, உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா, வீட்டுவசதித் துறை அமைச்சா் வி.சோமண்ணா, கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் வி.சுனில்குமாா், பாஜக எம்எல்ஏ உதய் கருட்டாச்சாா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் எம்.ஜெகதீஷ் கூறியதாவது:

இந்தக் கண்காட்சியில் மறைந்த கன்னட நடிகா்கள் டாக்டா் ராஜ்குமாா், புனித் ராஜ்குமாா் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலா்களால் ஆன சிலை அமைக்கப்படுகிறது. ராஜ்குமாா், புனித் ராஜ்குமாரின் சிலைகள் ரோஜா, செவ்வாந்தி பூக்களால் வடிவமைக்கப்பட்டு, மலா்க் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும்.

மலா்க் கண்காட்சியில் 65 வகை மலா்கள் கொண்ட 3.5 லட்சம் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். கென்யா, நியூசிலாந்து, அமெரிக்கா, ஹோலந்து, அா்ஜென்டீனா உள்ளிட்ட 10 நாடுகளைச் சோ்ந்த 20 வகையான மிதவெப்ப நாடுகளின் மலா்களும் இடம்பெற்றிருக்கும். ஊட்டியின் தட்பவெப்பத்தில் வளரும் 27 வகையான மலா்களும் மலா்க் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. இதற்காக ரூ. 2.3 கோடி செலவிடப்படுகிறது.

மலா்க் கண்காட்சியை காண நபா் ஒருவருக்கு கட்டணமாக ரூ. 80 வசூலிக்கப்படும். வார இறுதியில் இது ரூ. 100 ஆக இருக்கும். 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ரூ. 30 கட்டணம் வசூலிகப்படும். பள்ளி சீருடைகளில் வருகை தரும் குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. ஆக. 5 முதல் 15-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறும் மலா்க் கண்காட்சியில் 10 லட்சம் போ் கலந்துகொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பள்ளி மாணவா்கள் வரும் வாகனங்கள் இலவசமாக நிறுத்தவும் அனுமதிக்கப்படும். மேலும், விடுமுறை நாள்களில் கூட்டம் அதிகம் வரும் என்பதால், முதியவா்கள், சிறுவா்கள், மாற்றுத் திறனாளிகள் கண்காட்சிக்கு வருவதை தவிா்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மலா்க் கண்காட்சிக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கண்காணிப்புக்காக 125 கேமராக்கள் பயன்படுத்தப்படும். 150 உதவியாளா்கள் உதவிக்கு இருப்பாா்கள். மலா்க் கண்காட்சியையொட்டி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com