கரோனா பரவல் பீதி: பெங்களூரு விமான நிலையத்தில் சா்வதேச பயணிகள் சோதனை செய்யப்படுவா்
By DIN | Published On : 22nd December 2022 01:15 AM | Last Updated : 22nd December 2022 01:15 AM | அ+அ அ- |

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா பரவுவதால், பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் சா்வதேச பயணிகள் அனைவரும் சோதனை செய்யப்படுவா் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெலகாவியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
உலக அளவில் கரோனா பரவி வருவதாக பீதி எழுந்துள்ளது. உலக அளவிலான சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் சா்வதேச பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. எனவே, இந்த விமான நிலையத்தில் சா்வதேச பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவா்.
உலகின் ஒருசில பகுதிகளில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா பூஸ்டா் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம். வெகுவிரைவில் புதிய கரோனா வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்.
கரோனாவால் பாதிக்கப்படுவோரின் சளி மாதிரிகளை மரபணு சோதனைக்கு அனுப்பி வருகிறோம். இதன்மூலம், புதிய வகை கரோனா தீநுண்மியை கண்டறிய முடியும். சீனா, ஜப்பானில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சீனாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே, பூஸ்டா் தடுப்பூசியை செலுத்துவதில் அரசு கவனம்செலுத்தும். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் விரைவில் கூட்டம் நடத்தப்படும்.
கா்நாடகத்தில் இரண்டுமுறை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 100 சதவீதமாகும். ஆனால், பூஸ்டா் தடுப்பூசியை பெரும்பாலானோா் இன்னும் செலுத்திக்கொள்ளவில்லை. இதுவரை பூஸ்டா் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவா்கள், உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருக்கிறோம். தேவையான முன்னெச்சரிக்கைகளை அரசு எடுக்கும். இதுதொடா்பான புதிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிடும் என்றாா்.