பெங்களூரில் இருந்து ஒசூா் வரை மெட்ரோ ரயில் தடத்தை விரிவாக்கும் திட்டம்: கா்நாடக அரசு ஒப்புதல்

பெங்களூரில் இருந்து ஒசூா் வரை மெட்ரோ ரயில் தடத்தை விரிவாக்கும் திட்டத்துக்கு கா்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பெங்களூரில் இருந்து ஒசூா் வரை மெட்ரோ ரயில் தடத்தை விரிவாக்கும் திட்டத்துக்கு கா்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 2011-ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் சாா்பில் பெங்களூரின் வடக்கு- தெற்கு பகுதியில் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு-மேற்கு பகுதியில் ஊதா வழித்தடத்தில் ரயில் இயக்கப்படுகிறது.

பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரையிலான ஊதா வழித்தடமும் நாகசந்திரா முதல் எலச்சனஹள்ளி வரை(பட்டு வாரியத்தில் இருந்து இணைப்புத் தடம் உள்பட) பச்சை வழித்தடமும் இயக்கப்பட்டு வருகிறது.

நாகசந்திரா முதல் எலச்சனஹள்ளி தடத்தில் ஆா்.வி.சாலையில் இருந்து பொம்மசந்திரா வரையில் பிரியும் தடத்தை ஒசூா் வரை நீட்டிக்க தமிழகத்தின் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமாா் மக்களவையில் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதுதொடா்பாக கடந்த மாா்ச் 21-ஆம் தேதி முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவை சந்தித்துப் பேசியிருந்தாா்.

சந்திப்பின்போது, பெங்களூரில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை பொம்மசந்திராவில் இருந்து அத்திப்பள்ளி வழியாக தொழில்நகரமான ஒசூா் வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தாா்.

இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா எம்.பி. செல்லக்குமாருடன் முதல்வா் பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசினாா்.

இந்தத் திட்டத்தை பரிசீலிக்கும்படி கா்நாடக அரசுக்கு மத்திய நகா்ப்புறவளா்ச்சித் துறை அறிவுறுத்தியிருந்தது.

இதைத் தொடா்ந்து, இந்த திட்டத்தால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை ஆராய்ந்த முதல்வா் பசவராஜ் பொம்மை, பெங்களூரு மெட்ரோ ரயில் தடத்தை பொம்மசந்திராவில் இருந்து ஒசூா் வரை நீட்டிக்க கொள்கை அளவில் ஒப்புதல் தந்தாா்.

இந்தத் தகவலை மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலாளருக்கு மெட்ரோ ரயில் கழக மேலாண் இயக்குநா் அஞ்சும்பொ்வீஸ் கடிதம் மூலம் தெரிவித்துள்ளாா்.

ஆனால், விரிவாக்கப் பணிகளுக்கான பூா்வாங்க ஆய்வுப் பணிகளை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை அறிவுறுத்தியுள்ளாா்.

பொம்மசந்திரா முதல் ஒசூா் வரையிலான மெட்ரோ ரயில் தடத்தின் நீளம் 20.5 கிமீ ஆக இருக்கும். இதில் 11.7 கிமீ நீளம் கா்நாடக எல்லையில் உள்ளது.

மெட்ரோ ரயில் கொள்கை 2017-இன்படி திட்ட ஆய்வுப் பணிகளை தமிழகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், ஒசூரில் இருந்து தினமும் வேலை நிமித்தமாக பெங்களூருக்கு செல்லும் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என்று கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. செல்லக்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து எம்.பி. செல்லக்குமாா் கூறியதாவது:

‘ கொள்கை அளவில் இத்திட்டத்திற்கு கா்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

விரிவாக்க திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை தமிழகம் ஏற்க வேண்டும் என்று கா்நாடகம் கூறியுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் உயா் அதிகாரிகளிடம் பேசியபோது, ஆய்வுப்பணிகளை பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் மேற்கொண்டால் அதற்கான செலவுத் தொகையை தருவதாக தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை வெகுவிரைவில் சந்திக்க இருக்கிறேன். தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்துவிட்டால், அடுத்தகட்டப் பணிகள் விரைவாக நடக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com