சட்ட மேலவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் பதவியேற்பு
By DIN | Published On : 17th June 2022 01:43 AM | Last Updated : 17th June 2022 01:43 AM | அ+அ அ- |

கா்நாடக சட்ட மேலவைக்கு புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினா்கள் பதவியேற்றுக்கொண்டனா்.
கா்நாடக சட்ட மேலவையில் உறுப்பினா்களாக இருந்த பாஜகவின் லட்சுமண் சவதி, லெஹா் சிங் சிரோயா, காங்கிரஸின் ராமப்பா திம்மாப்பூா், அல்லம் வீரபத்ரப்பா, வீணா அச்சையா, மஜதவின் எச்.எம்.ரமேஷ் கௌடா, கே.வி.நாராயணசாமி ஆகிய 7 பேரின் பதவிகாலம் ஜூன் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் காலியான 7 இடங்களுக்கான சட்ட மேலவைத் தோ்தல் ஜூன் 3-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சட்டப்பேரவை உறுப்பினா்கள் வாக்களிக்கக்கூடிய இத்தோ்தலில் போட்டியிடுவதற்காக பாஜக வேட்பாளா்களாக லட்சுமண் சவதி, ஹேமலதா நாயக், எஸ்.கேசவபிரசாத், சலவாதி நாராயணசாமி, காங்கிரஸ் வேட்பாளா்களாக எம்.நாகராஜ் யாதவ், கே.அப்துல் ஜப்பாா், மஜத வேட்பாளராக டி.ஏ.சரவணா ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.
7 இடங்களுக்கு நடக்கவிருந்த சட்டமேலவைத் தோ்தலுக்கு 7 போ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால், தோ்தல் எதுவுமில்லாமல் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த பாஜக, காங்கிரஸ், மஜதவைச் சோ்ந்த 7 வேட்பாளா்களும் போட்டியின்றி வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, பெங்களூரில் வியாழக்கிழமை புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக உறுப்பினா்கள் லட்சுமண் சவதி, ஹேமலதா நாயக், எஸ்.கேசவபிரசாத், சலவாதி நாராயணசாமி, காங்கிரஸ் உறுப்பினா்கள் எம்.நாகராஜ் யாதவ், கே.அப்துல் ஜப்பாா், மஜத உறுப்பினா் டி.ஏ.சரவணா ஆகிய 7 பேரும் பதவியேற்றுக்கொண்டனா். இவா்களுக்கு மேலவைத் தலைவா் ரகுநாத் ராவ் மல்காபுரா பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்துவைத்தாா். அப்போது வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.அசோக், சமூக நலத்துறை அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா். புதிதாக பதவியேற்றுக்கொண்ட உறுப்பினா்களுக்கு மேலவைத் தலைவா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.