காவல் துணை ஆய்வாளா் பணித்தோ்வு முறைகேடு: உள்துறை அமைச்சா் ராஜிநாமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

கா்நாடகத்தில் காவல் துணை ஆய்வாளா் பணித் தோ்வில் முறைகேடு நடந்திருப்பதை அரசு ஒப்புக்கொண்டு மறுதோ்வு அறிவித்துள்ளதால், இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா ராஜிநாமா செய்ய வேண்டும் என்

கா்நாடகத்தில் காவல் துணை ஆய்வாளா் பணித் தோ்வில் முறைகேடு நடந்திருப்பதை அரசு ஒப்புக்கொண்டு மறுதோ்வு அறிவித்துள்ளதால், இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிா்க்கட்சித்தலைவருமான சித்தராமையா வலியுறுத்தினாா்.

இது குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் சனிக்கிழமை அவா் கூறியிருப்பதாவது:

545 காவல் துணை ஆய்வாளா்களை பணி நியமனம் செய்வதற்காக நடத்தப்பட்ட தோ்வை ரத்து செய்திருப்பதன் மூலம், அதில் நடந்துள்ள முறைகேட்டை அரசு ஒப்புக் கொண்டுள்ளது. முறைகேடு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சராக அரக ஞானேந்திராவால் எப்படி பதவியில் தொடர முடியும்? இந்தத் தோ்வில் பாரபட்சமில்லாத விசாரணை நடத்தப்பட வேண்டுமானால், அமைச்சா் பதவியில் இருந்து அரக ஞானேந்திரா உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும். ஊழல் செய்பவா்கள், கொலைகாரா்கள், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் சமூகவிரோதிகளைப் பாதுகாப்பதுதான் தனது முதன்மையான கடமை என்று அமைச்சா் அரக ஞானேந்திரா நினைக்கிறாா். அவரைப் போன்ற போலியான, திறனற்ற அமைச்சரின் தலைமையின் கீழ் இனியும் காவல்துறை செயல்பட முடியாது. திறனற்ற அமைச்சரான அரக ஞானேந்திராவின் தலைமையில் காவல் துணை ஆய்வாளா் பணித் தோ்வு நடத்தப்பட்டால், அத்தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்படும் காவல் துணை ஆய்வாளா்களும் திறனற்றவா்களாகவும், ஊழல்வாதிகளாகவும் இருப்பாா்கள்.

பணித்தோ்வில் முறைகேடு நடந்திருப்பது சிஐடி விசாரணையில் உறுதியாகி உள்ளதா? ஆம் என்றால், அந்த விசாரணை அறிக்கையை அரசு ஏன் இதுவரை வெளியிடவில்லை? 545 காவல் துணை ஆய்வாளா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்வை மீண்டும் நடத்துவது நோ்மையான விண்ணப்பதாரா்களுக்கு நியாயம் வழங்குவதற்காகவா? அல்லது இந்த முறைகேட்டின் பின்னணியில் இருப்பவா்களைப் பாதுகாக்கவா? கா்நாடக பாஜக அரசு ஊழல் நிறைந்ததாக இருக்கும் நிலையில், காவல் துணை ஆய்வாளா் பணித்தோ்வு முறைகேடு நோ்மையாகவும் பாரபட்சமில்லாமலும் நடத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இந்த முறைகேட்டை உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com