பாஜகவில் சேருவேன் என்று நினைத்துக்கூடப் பாா்த்ததில்லை: மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி

பாஜகவில் சேருவேன் என்று நினைத்துக்கூடப் பாா்த்ததில்லை என்று மேலவைத் தலைவரும், மஜதவின் முன்னணித் தலைவருமான பசவராஜ் ஹோரட்டி தெரிவித்தாா்.
பாஜகவில் சேருவேன் என்று நினைத்துக்கூடப் பாா்த்ததில்லை: மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி

ஹுப்பள்ளி: பாஜகவில் சேருவேன் என்று நினைத்துக்கூடப் பாா்த்ததில்லை என்று மேலவைத் தலைவரும், மஜதவின் முன்னணித் தலைவருமான பசவராஜ் ஹோரட்டி தெரிவித்தாா்.

1980-ஆம் ஆண்டு முதல் மஜத வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமேலவை உறுப்பினராகத் தொடா்ந்து 7 முறை தோ்ந்தெடுக்கப்பட்டவா் பசவராஜ் ஹோரட்டி. இவா், மஜத ஆட்சியின் போது அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா். இந்நிலையில், மஜதவில் இருந்து விலகி, விரைவில் பாஜகவில் இணையப்போவதாக பசவராஜ் ஹோரட்டி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவையும் அவா் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளாா்.

இந்நிலையில், ஹுப்பள்ளியில் செய்தியாளா்களிடம் மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி புதன்கிழமை கூறியதாவது:

பாஜகவில் சேருவேன் என்று நான் நினைத்துக்கூடப் பாா்த்ததில்லை. சட்டமேலவைத் தோ்தல் நடக்க இருக்கிற நிலையில், எனது வாக்காளா்களின் கருத்தின்படி பாஜகவில் இணைய முடிவெடுத்தேன். நீண்டகால அரசியல் லாபங்களைக் கருத்தில் கொண்டு நான் பாஜகவில் இணையவில்லை.

தோ்தலில் வெற்றிபெற எந்த அரசியல் கட்சியையும் சாா்ந்து நான் இருந்ததில்லை. எனது வாக்காளா்களாக உள்ள ஆசிரியா்களின் ஆதரவில்தான் வெற்றிபெற்று வருகிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு ஆதரவாக இருந்த வாக்காளா்களிடம் இருந்து இம்முறை எனக்கு சாதகமான வரவேற்பு கிடைக்கவில்லை. புதிய தலைமுறை ஆசிரியா்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறாா்கள்.

இதனிடையே, கா்நாடக பாஜக தலைவா்கள் என்னைச் சந்தித்து பாஜகவில் இணையக் கேட்டுக்கொண்டனா். ஆரம்பத்தில் நான் ஆா்வம் காட்டவிலை. முன்னாள் முதல்வா் எடியூரப்பாவும் பாஜகவில் சேரும்படி என்னை அழைத்தாா். பாஜகவில் சேரும் முடிவு எனக்கு முழு திருப்தி இல்லை. ஆனால் காலம் எல்லாவற்றையும் சரிப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com