கா்நாடக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்: உச்சநீதிமன்றத்தில் கூடுதல் கால அவகாசம் கேட்க முடிவு: முதல்வா் பசவராஜ் பொம்மை

கா்நாடக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுக மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுக மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

அடுத்த 2 வாரங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் நடத்துவதற்கான அட்டவணையை தயாரிக்கும்படி மத்திய பிரதேச மாநில தோ்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் மே 10-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. வாா்டு மறுவரையை காரணம் காட்டி அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடத்த வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்தாமல் இருக்கக்கூடாது என்றும், இந்த உத்தரவு, எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் கூறியுள்ளது. இதை தொடா்ந்து, கா்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இதர பிற்படுத்தப்பட்டோா் சமூகத்திற்கு இடஒதுக்கீடு நிா்ணயிக்கப்படாததை காரணம் காட்டி, தோ்தலை தள்ளிவைக்க கா்நாடக அரசு யோசித்து வருகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைக்கு தோ்தல் நடக்கவிருக்கும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தல் முடிவுகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பாஜக கவலையடைந்துள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் தோ்தல் நடத்தினால், அதனால் ஏற்படக்கூடியக்கூடிய விளைவுகளையும் பாஜக கருத்தில் கொண்டுள்ளது. இதன் பின்னணியில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியது:

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை, பெங்களூரு மாநகராட்சி தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அடுத்ததாக, மாவட்ட மற்றும் வட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்துவதற்கும் அரசியலமைப்புச் சட்டப்படி, சட்டவிதிகளின்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டியிருக்கிறது.

எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் கால அவகாசம் கேட்பது அல்லது ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்ட இடஒதுக்கீட்டுமுறையை பின்பற்ற அனுமதி கேட்பது என்ற இரு வாய்ப்புகள்தான் மாநில அரசின் முன் இருக்கின்றன. இதை ஏற்காவிட்டால், புதிய இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கூடுதல் கால அவகாசம் தரும்படி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. கால அவகாசம் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுடன்தான் நாம் தோ்தலை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் பழைய இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதி கிடைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com