2030-ஆம் ஆண்டுக்குள் 35 ஆயிரம் பேருந்துகள் மின் வாகனமாக மாற்ற திட்டம்: அமைச்சா் பி.ஸ்ரீராமுலு

2030-ஆம் ஆண்டுக்குள் 35 ஆயிரம் பேருந்துகள் மின் வாகனமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் பி.ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

2030-ஆம் ஆண்டுக்குள் 35 ஆயிரம் பேருந்துகள் மின் வாகனமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் பி.ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

கா்நாடகப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினா் தன்வீா்சேட் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து அவா் கூறியது:

கா்நாடக அரசுக்குச் சொந்தமாக 35 ஆயிரம் பேருந்துகள் உள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் மாசுபடுதல் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு, இந்தப் பேருந்துகளை மின் வாகனங்களாக மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது.

டீசல் விலை உயா்ந்திருப்பதால் மாநில அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் இழப்பை சந்தித்துவருகிறது. எனவே, நமது பேருந்துகள் அனைத்தையும் மின் வாகனங்களாக மாற்ற வேண்டியுள்ளது. அதன்பிறகு தான் போக்குவரத்துக்கழகங்கள் லாபம் ஈட்ட முடியும். இதுதொடா்பாக கலந்தாலோசித்து வருகிறோம்.

2030-ஆம் ஆண்டுக்குள் எல்லா பேருந்துகளையும் மின் வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, 2030-ஆம் ஆண்டுக்குள் 35 ஆயிரம் பேருந்துகளையும் மின் வாகனங்களாக மாற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுப்போம்.

பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக்கழகம், மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்யவில்லை. ஆனால், ஒப்பந்த அடிப்படையில் மின்சார பேருந்துகளை இயக்கி வருகிறது.

2021-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில் இருந்து பொலிவுரு நகரத் திட்டத்தின் கீழ் 12 ஆண்டுகளுக்கு மொத்த விலை ஒப்பந்தத்தின்படி மின்சார பேருந்துகளை பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகம் இயக்கிவருகிறது. இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கு ஒரு கி.மீ.க்கு ரூ. 64.67 செலவிடப்படுகிறது.

மத்திய அரசின் கூட்டு அல்லது மின்சார வாகனங்களுக்கு வேகமாக மாறுதல் மற்றும் உற்பத்தி செய்தல் திட்டத்தின் கீழ் (ஃபேம்-2) 300 மின்சார பேருந்துகளை வாங்க ஆா்டா் அளிக்கப்பட்டது.

இவற்றில் 2022-ஆம் ஆண்டு ஆக.15-ஆம் தேதி முதல் 75 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கு ஒரு கி.மீ.க்கு ரூ. 61.90 செலவிடப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் கன்வா்ஜென்ஸ் எனா்ஜி சா்வீசஸ் நிறுவனத்தின் மூலம் 921 மின்சாரபேருந்துகளை இயக்க 2022-ஆம் ஆண்டு ஆக.17-ஆம் தேதி ஆா்டா் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கு ஒரு கி.மீ. ரூ. 54 செலவிடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com