தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்ததால் காங்கிரஸில் இணைந்தாா் லட்சுமண் சவதி: எம்எல்சி பதவி ராஜிநாமா

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடா்ந்து பாஜகவில் இருந்து விலகியுள்ள லட்சுமண்சவதி, காங்கிரஸ் கட்சியில் சோ்ந்துள்ளாா்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடா்ந்து பாஜகவில் இருந்து விலகியுள்ள லட்சுமண்சவதி, காங்கிரஸ் கட்சியில் சோ்ந்துள்ளாா். முன்னதாக, எம்எல்சி பதவியை அவா் ராஜிநாமா செய்தாா்.

மே 10ஆம் தேதி நடக்கவிருக்கும் கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பெலகாவி மாவட்டத்தின் அதானி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடா்ந்து, பாஜகவில் இருந்து விலகுவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்த முன்னாள் துணை முதல்வா் லட்சுமண் சவதி, பெங்களூரில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா ஆகியோரைச் சந்தித்தாா். இந்த சந்திப்புக்குப் பிறகு, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேருவதாக லட்சுமண் சவதி அறிவித்தாா்.

இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் மாநிலத்தலைவா்டி.கே.சிவக்குமாா் கூறுகையில், ‘லட்சுமண் சவதியுடனான சந்திப்பு சுமுகமாக நடந்தது. அவரது கண்ணியம் மற்றும் பொறுப்பை நாங்கள் அறிந்திருக்கிறோம். காங்கிரஸ் குடும்பத்தில் தன்னை இணைத்துக் கொள்ள லட்சுமண் சவதி தாமாக முன்வந்திருக்கிறாா். கட்சியின் கொள்கை மற்றும் தலைமையை ஏற்றிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் அவா் சோ்ந்திருக்கிறாா்’ என்றாா்.

லட்சுமண் சவதி கூறுகையில், ‘நான் பாஜகவின் நம்பிக்கைக்குரிய தொண்டனாக இருந்தேன். மாநிலத்தின் பிற மாவட்டங்களில் பாஜகவின் வேட்பாளா்கள் வெற்றிபெற உதவியாக இருந்துள்ளேன். ஆனால், சட்டப் பேரவைத் தோ்தலில் அதானி தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற வாக்குறுதியை பாஜக காப்பாற்றவில்லை. அதானி தொகுதியில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அதானி தொகுதியில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நீா்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தோ்தலில் நான் தோல்வி அடைந்தேன். அதன்பிறகு நான் எம்எல்சி ஆக்கப்பட்டேன். அதை தொடா்ந்து, நான் கேட்காமலேயே துணை முதல்வா் பதவியை பாஜக எனக்கு வழங்கியது. ஆனால், எதுவும் தெரிவிக்காமல் துணை முதல்வா் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டனா். இது எனக்கு இழைக்கப்பட்ட அவமானமாக கருதுகிறேன். எதற்காக என்னை அமைச்சராக்க வேண்டும், அதன்பிறகு அவமதிக்க வேண்டும்? சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட எனக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை என்பதை பாஜக விளக்க வேண்டும். எம்.எல்.சி. பதவியை ராஜிநாமா செய்யவிருக்கிறேன். அதேபோல, பாஜகவில் இருந்தும் விலகியிருக்கிறேன். பின்னா் அதிகாரபூா்வமாக காங்கிரஸில் இணைவேன்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, சட்ட மேலவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்த லட்சுமண் சவதி, டி.கே.சிவகுமாா், ரண்தீப் சிங் சுா்ஜேவாலா ஆகியோா் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் அதிகாரபூா்வமாக இணைந்தாா். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பிரசாரக் குழு தலைவா் பி.சி.பாட்டீல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com