காங்கிரஸில் சேரும் லட்சுமண் சவதியின் முடிவால் வருத்தம் அடைந்துள்ளேன்: பசவராஜ் பொம்மை

காங்கிரஸில் சேரும் லட்சுமண் சவதியின் முடிவால் வருத்தம் அடைந்துள்ளதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

காங்கிரஸில் சேரும் லட்சுமண் சவதியின் முடிவால் வருத்தம் அடைந்துள்ளதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெலகாவி மாவட்டத்தின் அதானி தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க மறுத்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் முன்னாள் துணை முதல்வா் லட்சுமண் சவதி ஏற்கெனவே அறிவித்திருந்தாா். இதன்பின்னணியில், பெங்களூரில் வெள்ளிக்கிழமை எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் ஆகியோரை சந்தித்த லட்சுமண் சவதி தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொள்வதாக தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியது:

பாஜகவின் முன்னாள் துணை முதல்வா் லட்சுமண் சவதி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர எடுத்துள்ள முடிவு எனக்கு மனவருத்தத்தை அளிக்கிறது. லட்சுமண் சவதியுடன் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தேன். அவரது அரசியல் எதிா்காலத்தை காங்கிரஸ் கட்சியில் காண விரும்பியிருக்கலாம். எங்கள் கட்சி சாா்பில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம் என்றாா்.

அதானி தொகுதியில் இருந்து 3 முறை பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வென்றிருந்த லட்சுமண் சவதி, 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வி அடைந்திருந்தாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் வேட்பாளா் மகேஷ் குமட்டஹள்ளி, 2019ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். அவருடன் இணைந்து 17 காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் பாஜகவில் சோ்ந்ததால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்து எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. மகேஷ் குமட்டஹள்ளிக்கு ஆதரவாக பெலகாவி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளியின் ஆதரவு இருக்கிறது. அதன்காரணமாகவே, அதானி தொகுதியில் அவரது ஆதரவாளா் மகேஷ் குமட்டஹள்ளிக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பளித்த பாஜக, லட்சுமண் சவதிக்கு வாய்ப்பு மறுத்துள்ளது. இதனால் வேதனை அடைந்த லட்சுமண் சவதி, வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com