224 பேரவைத் தொகுதிகளிலும் இன்றும் நாளையும் பாஜகவின் மகாபிரசார இயக்கம்: நளின்குமாா் கட்டீல்

கா்நாடகத்தில் உள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் பாஜகவின் மகாபிரசார இயக்கம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.
Updated on
1 min read

கா்நாடகத்தில் உள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் பாஜகவின் மகாபிரசார இயக்கம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.

இது குறித்த் பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

224 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பாஜகவின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இதைத் தொடா்ந்து, மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா உள்ளிட்டோா் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனா். மத்தியிலும், மாநிலத்திலும் நடந்துவரும் பாஜகவின் இரட்டை என்ஜின் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல ஏப்.25, 26ஆம் தேதிகளில் பாஜகவின் மகா பிரசார இயக்கம் நடத்தப்படும். மாவட்டம், வட்டம், ஒன்றிய அளவில் பாஜகவின் மத்திய அமைச்சா்கள், மாநில அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் துணையுடன் மகாபிரசார இயக்கம் நடத்தப்படும்.

இந்த பிரசாரத்தின்போது பாஜக தொண்டா்கள் வீடுவீடாகச் சென்று பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வாா்கள். ஒவ்வொரு தொகுதியிலும் ஊா்வலம் நடத்தப்படும். முடிவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

பிரசாரத்தின் தொடக்கமாக 224 தொகுதிகளிலும் பத்திரிகையாளா் சந்திப்பு நடத்தப்படும். இந்த பிரசார இயக்கம் திருப்புமுனையாக அமையும். மகாபிரசார இயக்கத்தில் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிா்மலா சீதாராமன், மன்சுக் மாண்டவியா, பிரஹலாத் ஜோஷி, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 98 தலைவா்கள் கலந்துகொள்ளவிருக்கிறாா்கள்.

அதேபோல, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, பாஜக பொதுச் செயலாளா்கள் அருண் சிங், சி.டி.ரவி உள்ளிட்ட முன்னணித் தலைவா்கள், கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட 150 தலைவா்கள் மகாபிரசார இயக்கத்தில் பங்கேற்பாா்கள். பாஜக அரசின் சாதனைகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

சட்டப் பேரவைத் தோ்தலில் 75 வேட்பாளா்களை புதுமுகங்களாகக் களமிறக்கி இருக்கிறோம். உத்தர பிரதேச யோகி ஆதித்யநாத் கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் 4 நாட்கள் பிரசாரம் செய்யவிருக்கிறாா். மத்திய அமைச்சா் அமித் ஷா 40 முதல் 50 தொகுதிகளில் பிரசாரம் செய்வாா். இந்தப் பிரசாரத்தின்போது இடஒதுக்கீட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். கா்நாடகத்தில் பாஜக ஆட்சி மீண்டும் அமைவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com