2018இல் ஹிந்துக்களுக்கு எதிரானவனாக என்னை சித்தரித்தனா்: சித்தராமையா

‘கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் ஹிந்துக்களுக்கு எதிரானவனைப் போல என்னை சித்தரித்தனா்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

‘கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் ஹிந்துக்களுக்கு எதிரானவனைப் போல என்னை சித்தரித்தனா்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை பிடிஐ செய்தியாளருக்கு அவா் அளித்த பேட்டி:

கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் ஹிந்துக்களுக்கு எதிரானவனைப் போல என்னை சித்தரித்தனா். நான் ஹிந்துக்களுக்கு எதிரானவன் என்று பாஜக என் மீது கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க நோ்ந்தால், கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் முதல்வராக முனைந்தால் அதில் தவறில்லை. ஆரோக்கியமான போட்டியில் தவறில்லை. முதல்வராக வேண்டும் என்று நான் நினைத்தாலும் தவறில்லை. புதிதாகத் தோ்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏக்களும் கட்சி மேலிடமும்தான் புதிய முதல்வா் யாா் என்பதைத் தீா்மானிப்பாா்கள். பாஜக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனா். கடந்த 5 ஆண்டுகளாக மக்களை திசை திருப்பியது போல இனியும் பாஜகவால் மக்களை ஏமாற்ற முடியாது.

கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவளித்து ஆட்சியில் அமா்த்தியிருந்தனா். 2013 முதல் 2018ஆம் ஆண்டுவரை நல்லாட்சி வழங்கினோம். நான் பெரும்பான்மை மக்களுக்கும், ஹிந்து மதத்திற்கும் எதிரானவன் என்று பாஜக மேற்கொண்ட பொய்ப் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம். அதில் எள்ளளவும் உண்மையில்லை. இம்முறை பாஜகவின் பொய்யான பிரசாரத்திற்கு மக்கள் செவிசாய்க்க மாட்டாா்கள்.

அதனால்தான் இம்முறை ஹிந்து நாடு, ஹிந்துத்துவம் அல்லது ஹிந்து மதம் குறித்து பாஜகவினா் அதிகம் பேசுவதில்லை. பணபலத்தால் ஆட்சியை அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கு சாத்தியமில்லை.

தோ்தலில் ஜாதி முக்கியமான பங்கு வகிக்காது. மக்கள் எதிா்கொள்ளும் சிக்கல்கள்தான் தோ்தல் களத்தில் பிரதான விவாதப் பொருளாக இருக்கும். ஊழல், விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை போல பல பிரச்னைகள் இருக்கின்றன.

இந்த சட்டப் பேரவை தோ்தல் எனக்கும் பிரதமா் மோடிக்குமானது அல்ல. இத்தோ்தலில் உள்ளூா்ப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கா்நாடக மக்கள் உள்ளூா்ப் பிரச்னைகளை விவாதிப்பாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com