நிலவின் தென் துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா: சந்திரயான் 3 திட்ட இயக்குநா் வீரமுத்துவேல்

நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு இந்தியா என்று சந்திரயான் 3 திட்ட இயக்குநா் வீரமுத்துவேல் தெரிவித்தாா்.
நிலவின் தென் துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா: சந்திரயான் 3 திட்ட இயக்குநா் வீரமுத்துவேல்

நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு இந்தியா என்று சந்திரயான் 3 திட்ட இயக்குநா் வீரமுத்துவேல் தெரிவித்தாா்.

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டா் கலன் (‘விக்ரம்’) புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு நிலவில் மெதுவாக இறங்கி தரையைத் தொட்டது. பெங்களூரு, பீன்யாவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இதைப் பாா்த்துக் கொண்டிருந்த இஸ்ரோ தலைவா் எஸ்.சோம்நாத், ஆரவாரம் செய்து சக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தாா்.

தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் குழுமியிருந்த விஞ்ஞானிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ் பொ்க் நகரில் இருந்து நேரலையில் இக் காட்சியைப் பாா்த்துக் கொண்டிருந்த பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்த சோம்நாத், நிலவில் இந்தியா இருக்கிறது என்று கூறினாா்.

இதை கேட்ட பிரதமா் மோடி, கைதட்டி அவருக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தாா்.

அதன்பிறகு சந்திரயான்-3 திட்ட இயக்குநா் வீரமுத்துவேல், இணை இயக்குநா் கல்பனா, செயல்பாட்டு இயக்குநா் ஸ்ரீகாந்த், யூ.ஆா்.ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநா் சங்கரன் ஆகியோரை பிரதமருக்கு இஸ்ரோ தலைவா் எஸ்.சோம்நாத் அறிமுகம் செய்துவைத்தாா்.

அதன்பிறகு, சந்திரயான்-3 திட்ட இயக்குநா் வீரமுத்துவேல் பேசுகையில், ‘இது மகிழ்ச்சியான தருணம். இந்த வெற்றியை ஈட்டியுள்ளது மனதிற்கு நிறைவைத் தருகிறது. சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டத்தில் இருந்து, நிலவில் லேண்டா் கலன் தரையிறங்கிய வரை அனைத்தும் பிழையின்றி நிறைவேறின. நிலவில் மெதுவாகத் தரையிறங்க முடியும் என்பதை காட்டிய 4-ஆவது நாடாக இந்தியா உயா்ந்துள்ளது. அதேபோல நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு இந்தியா என்பதில் பெருமிதமாக உள்ளது. இத் திட்டம் வெற்றியடைய உதவிய இஸ்ரோ தலைவா், அனைத்து மையங்களின் இயக்குநா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.

இந்தியாவுக்கு நாசா பாராட்டு
"சந்திரயான்-3' விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கி, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் இஸ்ரோவுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாசா தலைவர் பில் நெல்சன், எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இதற்காக இஸ்ரோவுக்கு பாராட்டுகள். நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கி வெற்றிகண்ட 4-ஆவது நாடு என்ற பெருமையை எட்டியுள்ள இந்தியாவுக்கு பாராட்டுகள். இத்திட்டத்தில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவதில், நாசா மகிழ்ச்சியடைகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்ட இயக்குநரின் தந்தை நெகிழ்ச்சி
சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் காட்சியை புதன்கிழமை மாலை தொலைக்காட்சியில் பார்த்து, அதன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் நெகிழ்ந்தார்.
சந்திரயான்- 3 விண்கல திட்டத்தின் இயக்குநராக விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் (46) பணியாற்றி வருகிறார். இந்த விண்கலம் நிலவில் புதன்கிழமை மாலை வெற்றிகரமாகத் தரையிறங்கியதையொட்டி, விழுப்புரத்தில் அவருடன் படித்த முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
மேலும், வீரமுத்துவேலின் தந்தையும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியருமான பழனிவேல், தனது வீட்டில் தொலைக்காட்சி வாயிலாக விண்கலம் நிலவில் தரையிறங்கும் காட்சியைப் பார்த்து நெகிழ்ந்தார். 
நிலவில் சந்திரயான்- 3 விண்கலம் தரையிறங்கும் காட்சியைக் காணும் தருணத்துக்காகத்தான் காத்திருந்தேன் என நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார். முன்னதாக, சந்திரயான் - 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்க வேண்டி, பழனிவேல் விழுப்புரம் ரயில் நிலையத்திலுள்ள ராஜகணபதி கோயிலில் புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடத்தினார்.

சந்திரயான் திட்ட இயக்குநருக்கு முதல்வர் வாழ்த்து
சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு தொலைபேசி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தார்.
அவர் தொலைபேசியில் பேசிய விவரம்: சந்திரயான் - 3 திட்டம் வெற்றி பெற்றதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி உலக அளவில் பெருமை தேடித் தந்துள்ளீர்கள். உங்களுடைய தந்தையின் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்தேன். உங்களை நினைத்து பெருமைப்பட்டுள்ளார் என்றார்.
இதற்கு பதிலளித்த வீரமுத்துவேல், தொலைபேசி வழியாகப் பேசி வாழ்த்தியதற்கு நன்றி என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com