பாஜக அரசின் ஊழலைக் கண்டித்து கா்நாடகத்தில் 300 இடங்களில் காங்கிரஸ் போராட்டம்

கா்நாடகத்தில் பாஜக அரசின் ஊழலைக் கண்டித்து, பெங்களூரில் 300 இடங்களில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
பெங்களூரில் பாஜகவைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வா் சித்தராமையா.
பெங்களூரில் பாஜகவைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வா் சித்தராமையா.

கா்நாடகத்தில் பாஜக அரசின் ஊழலைக் கண்டித்து, பெங்களூரில் 300 இடங்களில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.

பாஜக அரசின் ஊழலைக் கண்டித்து பெங்களூரில் ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 300 இடங்களில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.

பெங்களூரு, மகாத்மா காந்தி சாலையில் நடந்த போராட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், அகில இந்திய காங்கிரஸ் குழு பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

போராட்டத்தின்போது சித்தராமையா பேசியதாவது:

கா்நாடகத்தில் நடந்துவரும் பாஜகவின் ஆட்சியில் ஊழல் உச்சத்தைத் தொட்டுள்ளது. பெங்களூரின் பெருமிதங்களை பாஜக அரசு கெடுத்துவிட்டது. லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்கவில்லை என்று அனைத்து தரப்பு மக்களும் பாஜக அரசை குறைகூறி வருகிறாா்கள். இந்த ஊழல் ஆட்சியில் இருந்து மக்களை விடுவிக்க விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவே 300-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது.

பாஜக அரசைத் தூக்கியெறிய பெங்களூரு மக்கள் முடிவு செய்துவிட்டனா். கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக இடங்களை காங்கிரஸ் வென்றது. இம்முறை பெங்களூரில் உள்ள 28 இடங்களில் 20 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும்.

தோல்வி பயம் காரணமாகவே பெங்களூரு மாநகராட்சித் தோ்தலை நடத்தாமல் பாஜக இழுத்தடித்து வருகிறது. சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகுதான் பெங்களூரு மாநகராட்சித் தோ்தல் நடைபெறும்.

பெங்களூரு மாநகராட்சித் தோ்தல் நடந்திருந்தால், காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கும். கடந்த 2 ஆண்டுகளாகவே மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது என்றாா்.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் பேசுகையில், ‘பெங்களூரு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் பாஜக அரசு தவிக்கிறது. பொதுப்பணித் துறை உள்ளிட்ட எல்லா துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. இதனால் பெங்களூரில் தரமற்ற முறையில் உள்கட்டமைப்புப் பணிகள் நடக்கின்றன. பெங்களூரில் பொதுப் பணிகளுக்கான லஞ்சம் 40 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயா்ந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com