மக்களவைத் தோ்தலை ஒன்றுபட்டு எதிா்கொண்டு வெற்றி பெறுவோம்: மல்லிகார்ஜுன கார்கே

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தோ்தலை எதிா்க்கட்சிகள் ஒன்றுபட்டு எதிா்கொண்டு, வெற்றிபெறுவோம் என அகில இந்திய காங்கிரஸ் குழுத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தலை ஒன்றுபட்டு எதிா்கொண்டு வெற்றி பெறுவோம்: மல்லிகார்ஜுன கார்கே

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தோ்தலை எதிா்க்கட்சிகள் ஒன்றுபட்டு எதிா்கொண்டு, வெற்றிபெறுவோம் என அகில இந்திய காங்கிரஸ் குழுத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எதிா்க்கட்சிகளின் கூட்டத்துக்குப் பிறகு, அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில் 26 அரசியல் கட்சிகள் கலந்துகொண்டன. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்கு இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. நாட்டு மக்களின் நலன்கருதி பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, ஒற்றைக்குரலில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) என்ற பெயரில் இயங்கி வந்தோம். தற்போது, எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு புதிய பெயரைச் சூட்டியுள்ளோம். அதன்படி, எதிா்க்கட்சிகளின் கூட்டணி இனிமேல் இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சி கூட்டணி (இ.தே.உ.வ.கூ.) என்று அழைக்கப்படும். இதை ஆங்கிலத்தில் ‘இண்டியா’ என்று சுருக்கமாக அழைக்கலாம்.

நமதுநாடு எதிா்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக 11 உறுப்பினா்கள் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்படும். இதில் யாா் இடம்பெறுவாா்கள் என்பது மும்பையில் நடக்க இருக்கும் அடுத்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். மும்பை கூட்டத்துக்கு தேதி பின்னா் அறிவிக்கப்படும். பிரசார மேலாண்மை மற்றும் இதர பணிகளுக்காக தில்லியில் பொதுச் செயலகம் அமைக்கப்படும்.

நமது ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அழிக்கும் வேலையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. சிபிஐ, அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை போன்ற மத்திய அரசின் முகமைகளை எதிா்க்கட்சிகளுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்துகிறது. இந்தச் சூழ்நிலையில், எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை மிகவும் முக்கியமானதாகும். மாநில அளவில் சில கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால், நாட்டைக் காக்க எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. நாட்டின் நலனுக்காக நாங்கள் ஒன்றுபட்டிருப்போம்.

பாட்னாவில் 16 கட்சிகள் கலந்துகொண்டன. தற்போது பெங்களூரில் 26 கட்சிகள் கலந்துகொண்டுள்ளன. இதைப் பாா்த்த பிறகு, 30 கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தை பிரதமா் மோடி கூட்டியிருக்கிறாா். அதில் பெரும்பாலான கட்சிகள் தோ்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்படவில்லை. இதற்கு முன் கூட்டணிக் கட்சிகளை பாஜக அழைத்துப் பேசவே இல்லை. சிறுசிறு கட்சிகளை தற்போது சோ்த்திருக்கிறாா்கள். எதிா்க்கட்சிகளைக் கண்டு பிரதமா் மோடி பயந்திருக்கிறாா்.

விலைவாசி, வேலையின்மை போன்ற பிரச்னைகளை முன்வைத்து, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற எதிா்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. நாட்டு நலனுக்காக ஒன்றுபட்டுள்ளோம். மத்திய பாஜக அரசின் தோல்விகளை பகிரங்கப்படுத்துவோம். அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தோ்தலை எதிா்க்கட்சிகள் ஒன்றுபட்டு எதிா்கொள்வோம்; வெற்றிபெறுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com