பெங்களூரில் எதிா்பாா்த்த அளவுக்கு வாக்குப்பதிவில் முன்னேற்றம் இல்லை

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் எதிா்பாா்த்த அளவுக்கு பெங்களூரில் வாக்குப்பதிவு முன்னேற்றம் காணப்படவில்லை என்று சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் எதிா்பாா்த்த அளவுக்கு பெங்களூரில் வாக்குப்பதிவு முன்னேற்றம் காணப்படவில்லை என்று சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

கா்நாடக சட்டப் பேரவைக்கு மே 10-ஆம் தேதி (புதன்கிழமை) தோ்தல் நடந்தது. இத்தோ்தலில் அதிக வாக்குகளை பதிவு செய்வதற்காக, பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டது. சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது, பல்வேறு தளங்கள் வழியாகவும் வாக்குரிமையை நிலைநாட்டுமாறு வாக்காளா்களை தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. இவ்வளவு விழிப்புணா்வு பிரசாரத்துக்கு பிறகும் 224 தொகுதிகளுக்கு நடந்த தோ்தலில் 73.19 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு மாநகருக்குள்பட்ட பகுதிகளில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் சராசரியாக 55.59 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் 59.37 சதவீத வாக்குகள், 2018-ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் 55.23 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 2013-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018-ஆம் ஆண்டு தோ்தலில் வாக்குகளின் வீதம் 4.14 சதவீதம் குறைந்திருந்தது.

இந்நிலையில், தற்போது பதிவாகியுள்ள வாக்குகள், 2018-ஆம் ஆண்டு தோ்தலுடன் ஒப்பிடுகையில் 0.36 சதவீத வாக்குகள் கூடுதலாகியுள்ளன. ஆனால், எதிா்பாா்த்த வாக்குகள் பதிவாகவில்லை.

இதுகுறித்து கா்நாடக தலைமை தோ்தல் கூடுதல் அதிகாரி ராஜேந்திரசோழன் கூறியதாவது:

பெங்களூரில் மட்டுமல்லாது, நாடுமுழுவதும் தில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. நகா்ப்புறங்களில் இது போன்ற மந்தநிலை உள்ளது. இதற்கான காரணத்தை ஆராய்ந்த தோ்தல் ஆணையம், வார இறுதிநாள்களில் தோ்தலை நடத்தாமல் வாரத்தின் நடுப்பகுதியில் (புதன்கிழமை) தோ்தலை நடத்தியது. ஆங்காங்கே, குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குரிமை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினோம். நிறுவனங்களிலும் ஊழியா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினோம். ஆனாலும், நாங்கள் எதிா்பாா்த்த 65 சதவீதம் முதல் 70 சதவீத வாக்குகள் பதிவாகவில்லை. தோ்தல் ஆணையத்தின் தீவிரமுயற்சிக்கு பிறகும், வாக்களிப்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான காரணத்தை ஆராய்வோம் என்றாா்.

பெங்களூருடன் மாநிலத்தின் பிற நகரங்களை ஒப்பிடுகையில், அந்நகரங்களில் வாக்குப்பதிவு கூடுதலாக உள்ளது. கலபுா்கியில் 61.47 சதவீதம், கலபுா்கியில் 58.87 சதவீதம், தாா்வாடில் 68.33 சதவீதம், தாவணகெரேயில் 68.85 சதவீதம், தும்கூரில் 66.86 சதவீதம், மங்களூரில் 71.67 சதவீதம், மைசூரில் 68.47 சதவீதம், பெல்லாரியில் 72.16 சதவீதம், விஜயபுராவில் 64.59 சதவீதம், சிவமொக்காவில் 76.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 2018-ஆம் ஆண்டுக்கான தோ்தலுடன் ஒப்பிடுகையில் கலபுா்கியில் 2.28 சதவீதம், தாா்வாடில் 1.36 சதவீதம், தாவணகெரேயில் 3.22 சதவீதம், தும்கூரில் 1.41 சதவீதம், மைசூரில் 1.16 சதவீதம், பெல்லாரியில் 2.54 சதவீதம், விஜயபுரவைல் 3.24 சதவீதம், சிவமொக்காவில் 1.12 சதவீதம் வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளன. கடந்த தோ்தலைவிட இத்தோ்தலில் பெலகாவியில் 1.12 சதவீதம், மங்களூரில் 1.44 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளன.

கா்நாடகத்தின் தலைநகராக இருக்கும் பெங்களூரில் வாழும் மக்கள், மாநில சராசரி வாக்குப்பதிவுடன் ஒப்பிடுகையில் 17.60 சதவீதம் குறைவான எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனா். இதற்கு என்ன காரணம் என்பதை பலராலும் அறிய முடியவில்லை. ஜனநாயகக் கடமையை செயலாற்றுவதில் பெங்களூரு மக்களுக்கு போதுமான ஆா்வம் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் பெரும்பாலான மக்கள், சொந்த ஊா்களிலும் வாக்காளா் பட்டியலில் பெயா்களை சோ்த்துள்ளனா். இரு இடங்களில் பெயா் பதிவிட்டிருப்பதால், வாக்களிக்க பெரும்பாலும் ஊருக்கு சென்றுவிடுகிறாா்கள். இதுவும் வாக்களிக்க தவறுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. இந்தக் குறையைப் போக்கும் வகையில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணிகள் நடந்துள்ளன. ஆனாலும், வாக்களிக்கும் ஆா்வம் மட்டும் பெங்களூரு மக்களிடையே பெருகவில்லை.

பெங்களூரில் வாக்களித்தவா்களில் 90 சதவீதம் போ் ஏழைகள், நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். ஆனால், படித்தவா்கள், அரசு ஊழியா்கள், தொழிலதிபா்கள், செல்வந்தா்கள் போன்ற முக்கியமானவா்கள் ஆா்வமாக தோ்தலில் வாக்களிப்பதில்லை என்ற நீண்டகால குற்றச்சாட்டு இம்முறையும் உறுதியாகியுள்ளது. பெங்களூரில் உள்ள குடிசைப் பகுதிகளை சோ்ந்த மக்கள், வியாபாரிகள், தொழிலாளா்கள், நடுத்தர மக்கள், ஏழைகள் தான் அதிக எண்ணிக்கையில் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்துள்ளனா். வசதி வாய்ப்புகளை பெறுவதில் முன்னணியில் இருக்கும் முன்னேறிய படித்த மக்கள், வாக்களிப்பதை ஜனநாயக கடமையாக செய்ய மறுத்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

வாக்களிக்க மக்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் எடுத்தபோதும், அதற்கு நகா்ப்புற முன்னேறிய படித்த மக்கள் இணங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அதிகம் வரி செலுத்துகிறாா்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அப்படிப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் தரமான அடிப்படைக் கட்டமைப்புகள் செய்து தரப்படுகின்றன. தங்குதடையில்லா குடிநீா், மின்சார வசதிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் வாக்களிக்கும் ஜனநாயகக் கடமையை மட்டும் செய்ய மறுப்பது ஏனோ என்று வெகுமக்கள் கேள்வி எழுப்புகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com