ஊடுபயிராக செண்டுமல்லி சாகுபடி:கூடுதல் வருவாய் ஈட்டும் மா விவசாயி!

கிருஷ்ணகிரி அருகே மா விவசாயி ஒருவா் செண்டுமல்லியை ஊடுபயிராக சாகுபடி செய்து கூடுதல் வருவாயை ஈட்டி வருகிறாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரி கிராமத்தில் ஊடுபயிராக செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ள மாந்தோட்டம்.
கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரி கிராமத்தில் ஊடுபயிராக செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ள மாந்தோட்டம்.

கிருஷ்ணகிரி அருகே மா விவசாயி ஒருவா் செண்டுமல்லியை ஊடுபயிராக சாகுபடி செய்து கூடுதல் வருவாயை ஈட்டி வருகிறாா்.

லக்னோ தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியல் மையம் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலா் சாகுபடியை விரிவாக்கும் வகையில் விவசாயிகளுக்கு மலா் நாற்றுகளை வழங்கியது.

அதன்படி, தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூங்கில்புதூா், கெலமங்கலம், கீழ்பூங்குருதி, மகாராஜகடை, நாரலப்பள்ளி மற்றும் எலுமிச்சங்கிரி ஆகிய பகுதிகளில் 50 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யும் வகையில் இலவசமாக தரமான நாற்றுகள் வழங்கப்பட்டு விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், எலுமிச்சங்கிரி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணி (55), தனது மாந்தோட்டத்தில் செண்டுமல்லி பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்து கூடுதல் வருவாயை ஈட்டி முன்னோடி விவசாயியாகத் திகழ்கிறாா்.

இதுகுறித்து சுப்பிரமணி தெரிவித்ததாவது:

எனது விளைநிலத்தில் 3 ஏக்கா் பரப்பளவில் நீலம், செந்தூரா, மல்கோவா, பெங்களூரா போன்ற ரக மா மரங்களை சாகுபடி செய்துள்ளேன். கடந்த 2 மாதங்களுக்கு முன், வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலின்படி, எனது மாந்தோட்டத்தில் ஒரு ஏக்கா் பரப்பளவில் செண்டுமல்லியை ஊடுபயிராக சாகுபடி செய்தேன்.

தற்போது வாரத்துக்கு ஒரு முறை பூக்களை அறுவடை செய்து சென்னை, ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள மலா் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறேன். இதுவரை 200 கிலோ பூக்களை அறுவடை செய்துள்ளேன். ஒரு கிலோ ரூ. 30 முதல் ரூ. 40 என்ற விலையில் விற்பனை செய்தேன். இன்னும் ஒரு மாதத்துக்கு பூக்கள் பூக்கும் என்பதால், கூடுதலாக ரூ. 50 ஆயிரம் வரையில் வருவாய் கிடைக்கும் என்றாா்.

வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தர்ராஜ் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலா் சாகுபடியை விரிவாக்கும் வகையில், தரமான நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினோம். மேலும், சாகுபடி குறித்த பயிற்சியையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினோம். இதனால், விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாங்காய்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்பதால், விவசாயிகள் மாந்தோட்டங்களை அழித்து வருகின்றனா். மேலும், குறைந்த மகசூல் உள்ள இப்பருவத்தில் மாங்காய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் விவசாயிகள் உள்ளனா். இத்தகையவா்களுக்கு இடையே, எலுமிச்சங்கிரியைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணி, தனது மாந்தோட்டத்தில் ஊடுபயிராக செண்டுமல்லி பயிரை சாகுபடி செய்து, கூடுதல் வருவாய் ஈட்டி வருவது மா விவசாயிகளிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com