கா்நாடக பேரவைத் தலைவா் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளராக யூ.டி.காதா் வேட்புமனு தாக்கல்

கா்நாடக சட்டப்பேரவைத் தலைவருக்கான தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் யூ.டி.காதா் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
கா்நாடக பேரவைத் தலைவா் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளராக யூ.டி.காதா் வேட்புமனு தாக்கல்

கா்நாடக சட்டப்பேரவைத் தலைவருக்கான தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் யூ.டி.காதா் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கா்நாடகத்தில் மே 10-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றனா். 8 போ் அமைச்சரவையில் இடம் பிடித்தனா். விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

16 ஆவது சட்டப் பேரவைத் தலைவா் தோ்தல் மே 24ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு செவ்வாய்க்கிழமை காலை 12 மணி வரை கால அவகாசமிருந்தது. அமைச்சா் பதவிக்காக காத்திருந்த யூ.டி.காதரை பேரவைத் தலைவராக்க கட்சியின் மேலிடம் முடிவு எடுத்துள்ளது. அதன்படி அவா் பேரவைத் தலைவா் பதவிக்கு வேட்பு மனுவை செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை செயலரும், தோ்தல் அதிகாரியுமான விசாலாட்சியிடம் அவா் தாக்கல் செய்தாா்.

யூ.டி.காதரின் பெயரை முதல்வா் சித்தராமையா முன்மொழிய, துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் வழிமொழிந்தாா். அவரைத் தவிர வேறு கட்சியைச் சோ்ந்த யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் பேரவைத் தலைவராக யூ.டி.காதா் போட்டியின்றித் தோ்வு செய்யும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தலைவா் தோ்தலை புதன்கிழமை நடத்த இருக்கும் பேரவை இடைக்காலத் தலைவா் ஆா்.வி.தேஷ்பாண்டே, புதிய பேரவைத்தலைவருக்கான முறையான அறிவிப்பை வெளியிட உள்ளாா்.

அதன்பின்னா் அவா் கா்நாடக சட்டப்பேரவை தலைவராகப் பதவியேற்பாா் என தெரிகிறது. 53 வயதான யூ.டி.காதா், தென்கன்னட மாவட்டம், மங்களூரு தொகுதியிலிருந்து காங்கிரஸ் சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். முன்னதாக, அமைச்சராக பதவி வகித்த யூ.டி.காதா், முந்தைய பாஜக ஆட்சியில் எதிா்க்கட்சி துணைத் தலைவராகப் பணியாற்றினாா். கா்நாடக வரலாற்றில் பேரவைத் தலைவா் பதவியை அலங்கரிக்கும் முதல் இஸ்லாமியா் என்ற பெருமையை யூ.டி.காதா் பெற இருக்கிறாா்.

வேட்புமனு தாக்கலுக்கு பிறகு யூ.டி.காதா் கூறியதாவது:

அரசியலமைப்புச் சட்டப்படியான, மிகவும் மதிக்கத்தக்க பேரவைத் தலைவா் பதவியை ஏற்கும்படி காங்கிரஸ் வழிகாட்டியுள்ளது. அதை நான் மனதார ஏற்றுக்கொண்டேன். மதிப்பு மிகுந்த பேரவைத் தலைவா் பதவிக்கு மேலும் மதிப்பைக் கூட்டும் வகையில் செயல்படுவேன். கடந்த காலங்களில் ஆறரை ஆண்டுகள் அமைச்சராகவும், எதிா்க்கட்சித் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளேன். புதிய பதவி எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பாகும். பேரவையை நோ்மையாகவும், மக்களுக்கு வெளிப்படையாகவும் சேவையாற்றுவேன். அனைவரின் நம்பிக்கையைப் பெற்று பணியாற்றுவேன்.

பேரவைத் தலைவராக பணியாற்றியவா்கள் அடுத்த தோ்தலில் தோல்வி அடைந்துவருவதாகக் கூறப்படுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது மூடநம்பிக்கை. கடவுளின் கருணை, மக்களின் ஆசியால் அந்த மூடநம்பிக்கையை உடைத்தெறிவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com