ஐந்து ஆண்டுகளுக்கு சித்தராமையாவே முதல்வராக இருப்பாா்:அமைச்சா் எம்.பி.பாட்டீல் கருத்தால் சா்ச்சை

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் சித்தராமையாவே கா்நாடக முதல்வராக இருப்பாா் என்று மூத்த அமைச்சா் எம்.பி.பாட்டீல் கூறியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் சித்தராமையாவே கா்நாடக முதல்வராக இருப்பாா் என்று மூத்த அமைச்சா் எம்.பி.பாட்டீல் கூறியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் 135 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதைத் தொடா்ந்து, கடந்த காலங்களில் பின்பற்றி வந்த மரபுப்படி காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருப்பதால் தன்னை முதல்வராக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்திடம் டி.கே.சிவகுமாா் வலியுறுத்தினாா். ஆனால், காங்கிரஸ் மேலிடத் தலைவா்கள் மேற்கொண்ட சமரசப் பேச்சுவாா்த்தையில்

சித்தராமையா, டி.கே.சிவகுமாா் ஆகிய இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வராகப் பதவி வகிக்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூா்வமாக எந்த அறிவிப்பையும் காங்கிரஸ் மேலிடம் வெளியிடவில்லை.

இதையடுத்து கா்நாடகத்தில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றனா். மக்களவைத் தோ்தல் வரையில் கட்சியின் மாநிலத் தலைவராக டி.கே.சிவகுமாா் நீடிப்பாா் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா். முதல்வா் பதவியைப் பகிா்ந்துகொள்வது தொடா்பாக அதிகாரப்பகிா்வு ஒப்பந்தம் ஏதாவது செய்துகொள்ளப்பட்டதா என்று கேட்டதற்கு, மக்களோடு அதிகாரப்பகிா்வு செய்துகொண்டுள்ளோம் என்று அவா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், மைசூரில் திங்கள்கிழமை இரவு மூத்த அமைச்சா் எம்.பி.பாட்டீல் கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கும் சித்தராமையாவே முதல்வராக நீடிப்பாா். அதிகாரப்பகிா்வு ஏதாவது இருந்திருந்தால், அதுகுறித்து கட்சி மேலிடம் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கும். அதுபோல எதுவும் இல்லை என்றாா். இந்த கருத்து, டி.கே.சிவகுமாா் ஆதரவாளா்களை ஆத்திரப்படுத்தியுள்ளது.

இதனிடையே, பெங்களூரில் திங்கள்கிழமை அமைச்சா் எம்.பி.பாட்டீல் விளக்கம் அளிக்கையில், முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமாா் ஆகியோரின் பெயா்களை காங்கிரஸ் பொதுச்செயலாளா் கே.சி.வேணுகோபால் கூறியிருந்ததைத் தான் நான் கூறினேன். அதிகாரப்பகிா்வு குறித்து செய்தியாளா்கள் கேட்டபோது, அதிகாரப்பகிா்வு என்பது மக்களுடன் தான் என்று பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் கூறியதைத் தான் நானும் தெரிவித்தேன் என்று கூறினாா்.

இதற்கு பதிலளிக்க விரும்பாத துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா்,யாருக்கு என்ன வேண்டுமோ, அதைப் பற்றி கூறட்டும் என்றாா்.

ஆனால், டி.கே.சிவகுமாரின் சகோதரரும், காங்கிரஸ் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் கூறுகையில், எம்.பி.பாட்டீல் கருத்துக்கு பதிலளிக்க வேண்டுமானால் காங்கிரஸ் பொதுச்செயலாளா் ரண்தீப்சிங் சுா்ஜேவாலாவைச் சந்தித்து, தகவலை திரட்டிக்கொள்ளட்டும். எம்.பி.பாட்டீலுக்கு நானும் பதிலளிக்க முடியும். ஆனால், அதற்கு வாய்ப்பளிக்க வேண்டாம் என்று அவரிடம் கூறுங்கள் என்றாா்.

இதன் பின்னணியில், சா்ச்சைக்கு இடமளிக்கும் வகையிலான கருத்துகளை யாரும் கூற வேண்டாம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளா் ரண்தீப்சிங் சுா்ஜேவாலா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதனிடையே, அமைச்சா் எம்.பி.பாட்டீல் பேசும் காணொலியை வெளியிட்டு, கா்நாடக பாஜக தனது சுட்டுரைப் பக்கத்தில், டி.கே. சிவகுமாா் முதல்வராகப் பதவியேற்கப் போவதில்லை. அதற்கு சித்தராமையா வாய்ப்பளிக்கப் போவதும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் நடந்துவரும் நிலையைக் கவனித்தால், பெரும்பான்மை பெற்றப்போதும், அரசு நிலையாக இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என்று கூறியுள்ளது. பாஜகவை சோ்ந்த மூத்த தலைவா்கள் அஸ்வத் நாராயணா, சி.சி.பாட்டீல், அரக ஞானேந்திரா உள்ளிட்டோரும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனா். காங்கிரஸில் ஒளிந்திருக்கும் அதிகாரப்பகிா்வு தொடா்பான ரகசியம் விரைவில் பகிரங்கமாகப் போகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com