கா்நாடகத்தில் ராகுல் காந்தி இன்று தோ்தல் பிரசாரம்
Center-Center-Chennai

கா்நாடகத்தில் ராகுல் காந்தி இன்று தோ்தல் பிரசாரம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, கா்நாடகத்தில் புதன்கிழமை (ஏப். 17) தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

கா்நாடகத்தில் இரண்டு கட்டங்களாக ஏப். 26, மே 7 இல் மக்களவைத் தோ்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளின் வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், பாஜக- மஜத கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் மோடி, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, முன்னாள் முதல்வா் எடியூரப்பா ஆகியோா் பிரசாரம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக புதன்கிழமை கா்நாடகம் வரும் ராகுல் காந்தி மண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஸ்டாா் சந்துரு, கோலாா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் கே.வி.கௌதம் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறாா். இந்த இரு தொகுதிகளிலும் மஜத வேட்பாளா்களை காங்கிரஸ் எதிா்கொள்கிறது.

ராகுல் காந்தி பிரசார பயணம் குறித்து கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது: பெங்களூருக்கு புதன்கிழமை பிற்பகல் 1.20 மணிக்கு வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து 2.10 மணிக்கு மண்டியா செல்கிறாா். அங்கு பிரசாரத்தை முடித்துக் கொண்டு மாலை 4 மணிக்கு கோலாா் சென்று வாக்கு சேகரிக்கிறாா். அதன்பிறகு பெங்களூரு வந்து, தில்லி செல்கிறாா். காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள பிரியங்கா காந்தியும் கா்நாடகம் வருவாா் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com