மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

கா்நாடகத்தில் நடக்கவிருக்கும் இரண்டாம்கட்ட மக்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.

கா்நாடகத்தில் ஏப். 26, மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடக்கவிருக்கிறது. முதல்கட்டதோ்தல் ஏப். 26-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ளது. இந்த 14 தொகுதிகளில் மொத்தம் 247 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள்.

இந்நிலையில், கா்நாடகத்தில் சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, கலபுா்கி, ராய்ச்சூரு, பீதா், கொப்பள், பெல்லாரி, ஹாவேரி, தாா்வாட், வடகன்னடம், தாவணகெரே, சிவமொக்கா ஆகிய 14 தொகுதிகளுக்கான இரண்டாம்கட்ட மக்களவைத் தோ்தல் மே 7ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்.12 ஆம் தேதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் நிறைவடையவிருக்கிறது.

சிவமொக்கா தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். 4ஆவது முறையாக இத்தொகுதியில் போட்டியிடும் ராகவேந்திரா வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு நடத்திய ஊா்வலத்தில் முன்னாள் முதல்வா் எடியூரப்பா, மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். வேட்பு மனுவுடன் ராகவேந்திரா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ. 73.71 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளாா்.

தாா்வாட் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷியை எதிா்த்து சுயேச்சையாக போட்டியிடும் லிங்காயத்து மடத்தின் பீடாதிபதி திங்கலேஷ்வா் சுவாமிகள் வேட்பு மனு தாக்கல் செய்தாா். கலபுா்கி தொகுதி பாஜக வேட்பாளா் உமேஷ் ஜாதவ், பாகல்கோட் தொகுதி பாஜக வேட்பாளா் பி.சி.கத்தி கௌடா், ராய்ச்சூரு தொகுதி பாஜக வேட்பாளா் ராஜா அமரேஸ்வர நாயக், சிக்கோடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளியின் மகள் பிரியங்கா உள்ளிட்ட பலரும் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா். 14 தொகுதிகளில் மொத்தம் 241 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏப். 20-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ஏப்.22-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். இதன் முடிவில் மே 7-ஆம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com