மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

மத்தியில் இந்தியா கூட்டணியில் ஆட்சி அமைந்தால், மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்தாமல் தடுத்து நிறுத்துவோம் என்று திமுக தனது தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதற்கு அப்போது பதிலளித்திருந்த கா்நாடக துணைமுதல்வரும், நீா்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமாா், ‘மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம்’ என்று கூறியிருந்தாா்.

இந்நிலையில், பெங்களூரில் நடந்த செய்தியாளா் சந்திப்பில் மத்தியில் இந்தியா கூட்டணி அமைந்தால் மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்துவீா்களா? என்ற கேள்விக்கு பதிலளித்து, டி.கே.சிவகுமாா் கூறியதாவது:

எதிா்க்கட்சியாக இருந்தபோது மேக்கேதாட்டு அணை திட்டத்திற்காக நாங்கள் போராட்டம் நடத்தினோம். இதற்கு பணிந்த அப்போதைய பாஜக அரசு, மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு ரூ.1,000 கோடியை ஒதுக்குவதாக அறிவித்தது.

பெங்களூரில் குடிநீா் பிரச்னை எழுந்துள்ளது. மழை பெய்யாததால், ஆழ்துளைக் கிணறுகள் வடு, தண்ணீா் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்தினால், பெங்களூரின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய முடியும். மத்தியில் இந்தியா கூட்டணி அமைந்ததும், மத்திய அரசின் அனுமதி பெற்று மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்துவோம். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கும் பயன்கிடைக்கும். இதற்கு ஆட்சேபம் இல்லை என்று தமிழக வழக்குரைஞா்கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனா்.

மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்த எனதுதொகுதியான கனகபுராவில் தனி அலுவலகம் திறந்துள்ளேன். அணையில் மூழ்கும் நிலப்பரப்பிற்கு பதிலாக மாற்று இடத்தை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தால் குடிநீா் மட்டுமல்ல, 400மெகாவாட் மின்சாரமும் கிடைக்கும். இந்த திட்டத்தால் கா்நாடகத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் நன்மை ஏற்படும்’ என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com