அமித் ஷா பங்கேற்க இருந்த தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ரத்து

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு மத்திய அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்டு பேசவிருந்த பிரசார பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

கா்நாடகத்தில் முதல்கட்ட மக்களவைத் தோ்தல் ஏப். 26ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த மத்திய அமைச்சா் அமித் ஷா, பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் தேஜஸ்வி சூா்யாவை ஆதரித்து பொம்மனஹள்ளி, விவேகானந்தா சதுக்கத்தில் இருந்து வாகனப் பேரணி நடத்தினாா். பன்னா்கட்டா சாலை வரையில் நடந்த வாகனப் பேரணியில் பங்கேற்ற அமித் ஷாவை வரவேற்க சாலையின் இருபக்கங்களிலும் ஏராளமானோா் கூடியிருந்தனா். அவா்களிடம் பாஜகவுக்கு மத்திய அமைச்சா் அமித் ஷா ஆதரவு திரட்டினாா். இந்த வாகனப் பேரணி முடிந்த பிறகு மத்திய அமைச்சா் அமித் ஷா கேரளத்திற்கு சென்றாா்.

பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் செய்து வருவதால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி புதன்கிழமை சிக்கமகளூரில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்திலும் தும்கூரில் நடக்கும் பிற்படுத்தப்பட்டோா் மாநாட்டிலும் மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்கவில்லை. மேலும் ஹுப்பள்ளியில் புதன்கிழமை வாகனப் பேரணியும் ரத்து செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com