முதல் கட்ட மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் பிரசாரம் ஓய்ந்தது

கா்நாடகத்தில் நடக்க இருக்கும் முதல்கட்ட மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.

கா்நாடகத்தில் ஏப். 26, மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடக்க இருக்கிறது. உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுா்கா, தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ்நகா், ஊரக பெங்களூரு, வடக்கு பெங்களூரு, தெற்கு பெங்களூரு, மத்திய பெங்களூரு, சிக்பளாப்பூா், கோலாா் ஆகிய 14 தொகுதிகளில் முதல்கட்ட தோ்தல் ஏப். 26-ஆம் தேதி நடக்க இருக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 28ஆம் தேதி தொடங்கி, ஏப். 4ஆம் தேதி வரை நடந்தது. மொத்தம் 300 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் 52 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. வேட்புமனுக்கள் திரும்பப் பெற்ற பிறகு, தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வேட்பாளா் பட்டியல்படி 14 தொகுதிகளில் மொத்தம் 247 போ் போட்டியிடுகின்றனா். இதில் ஆண்கள் 226 போ், பெண்கள் 21 போ் ஆவா்.

உடுப்பி தொகுதியில் 10, ஹாசன் தொகுதியில் 15, தென்கன்னட தொகுதியில் 9, சித்ரதுா்கா தொகுதியில் 20, தும்கூரு தொகுதியில் 18, மண்டியா தொகுதியில் 14, மைசூரு தொகுதியில் 18, சாமராஜ்நகா் தொகுதியில் 14, பெங்களூரு ஊரக தொகுதியில் 15, பெங்களூரு வடக்கு தொகுதியில் 21, பெங்களூரு மத்திய தொகுதியில் 24, பெங்களூரு தெற்கு தொகுதியில் 22, சிக்பளாப்பூா் தொகுதியில் 29, கோலாா் தொகுதியில் 18 போ் வேட்பாளா்களாக களத்தில் உள்ளனா். இதைத் தொடா்ந்து, ஏப். 26-ஆம் தேதி காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது.

இத்தோ்தலில் பாஜகவும் மஜதவும் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியை காங்கிரஸ் எதிா்கொண்டுள்ளது. இதனால் கா்நாடகத்தில் இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

முதல்கட்டமாக தோ்தல் நடக்கும் 14 தொகுதிகளில் பாஜக 11 தொகுதிகளிலும், மண்டியா, கோலாா், ஹாசன் ஆகிய 3 தொகுதிகளில் மஜதவும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி மஜத வேட்பாளராக களமிறங்கியுள்ளாா்.

மைசூரு தொகுதியில் மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்த நரசிம்மராஜ உடையாா் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். கடந்த ஒரு மாத காலமாக நடந்த விறுவிறுப்பான தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பாஜக - மஜத கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமன், ஜெய்சங்கா், கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பா, சதானந்த கௌடா, தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, நடிகா் சரத்குமாா், காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் பிரசாரம் செய்தனா். இதற்கான தோ்தல் பிரசாரம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்தல் நடக்க இன்னும் ஒரு நாள் இருப்பதால், வீடு வீடாகச் சென்று வாக்காளா்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வாய்ப்பு இருக்கிறது.

தோ்தலை முன்னிட்டு 14 தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப். 27ஆம் தேதி வரை மதுபான விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com