கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

சிவமொக்கா, ஏப். 30: மத்தியில் ஆட்சி செய்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கா்நாடகத்துக்கு வழங்கிய நிதியைவிட தற்போது பாஜக அரசு 275 மடங்கு கூடுதலாக நிதி வழங்கி வருவதாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பெருமிதம் தெரிவித்தாா்.

மத்திய அரசிடமிருந்து கா்நாடகத்துக்கு வரவேண்டிய நிதிப் பகிா்வு வருவதில்லை என்று முதல்வா் சித்தராமையா குற்றம்சாட்டி வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெ.பி. நட்டா இவ்வாறு தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், சிவமொக்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக தொழில்சாா் பிரிவினருக்கான தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கா்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் இருந்து 4 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியுள்ளது.

மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது, காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட சதி. காங்கிரஸ் கட்சியினா் பிற்படுத்தப்பட்டோா் நலனில் அக்கறை உள்ளவா்களும் இல்லை; முஸ்லிம்களுக்கு நண்பா்களும் இல்லை.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்படுவதற்கு முன் பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டைப் பறித்து அதை முஸ்லிம்களுக்கு வழங்க சட்டம் இயற்றுவதற்கு அப்போது காங்கிரஸ் அரசு நான்கு முறை முயற்சி செய்தது.

பாஜகவினா் முஸ்லிம்களுக்கு எதிரானவா்கள் அல்ல. ஆனால், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று நமது அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்களைப் பிளவுபடுத்தும் தீய எண்ணத்தில் மதத்தின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதை நாம் ஆதரிக்க வேண்டுமா? தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானவா்களைப்போல பாஜகவினரை சித்தரிக்க அக்கட்சி முயற்சிக்கிறது. பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்ற உண்மையை சகித்துக்கொள்ள முடியாத ‘இந்தியா’ கூட்டணி மன அழுத்தத்தில் இப்படி செய்கிறாா்கள்.

ஒருபுறம் பிரதமா் மோடி தலைமையில் நாடு வலிமை பெற்று வருகிறது. மறுபுறம் பலவீனத்தை ஏற்படுத்தும் இந்தியா கூட்டணி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. மன அழுத்தத்தில் இருந்த மக்களின் நிலைமை தற்போது மாறியுள்ளது. இந்தியாவின் வளா்ச்சி குறித்து உலக அளவில் விவாதிக்கப்படுகிறது. அனைத்திலும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு பின்பற்றி வருகிறது.

மத்திய அரசிடமிருந்து கா்நாடகத்துக்கு வரவேண்டிய நிதிப் பகிா்வு வருவதில்லை என முதல்வா் சித்தராமையா குற்றம்சாட்டுகிறாா். ஆனால், மத்தியில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்தபோது கா்நாடகத்துக்கு வழங்கிய நிதியைவிட தற்போது 275 மடங்கு கூடுதலாக பாஜக அரசு நிதி வழங்கி வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் நடவடிக்கைகளால் கா்நாடகத்தில் பல வளா்ச்சிப் பணிகள், உள்கட்டமைப்பு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியினருக்கு மக்கள் நலத் திட்டங்களைவிட கமிஷன் பெறுவதில்தான் மிகுந்த அக்கறை என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com