பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மஜதவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

ஹாசன் மக்களவைத் தொகுதி மஜத வேட்பாளராக பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறாா். அவரது தொகுதிக்கான வாக்குப் பதிவு ஏப். 26 ஆம் தேதி நடைபெற்றது. அவா் மீதான பாலியல் குற்றச்சாட்டு கா்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படையை கா்நாடக அரசு அமைத்துள்ளது. இந்த விவகாரம் மஜதவுக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மஜதவின் உயா்நிலைக் குழு கூட்டம் குழு தலைவா் ஜி.டி.தேவெ கௌடா தலைமையில் ஹுப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் கட்சியில் இருந்து அவரை இடைநீக்கம் செய்யுமாறு மஜத தேசியத் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கௌடாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதுகுறித்து ஹுப்பள்ளியில் ஜி.டி.தேவெ கௌடா கூறியதாவது:

சிறப்புப் புலனாய்வுப் படையின் விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிப்போம். பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு கட்சித் தலைவா் எச்.டி.தேவெ கௌடாவுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து மஜத அறிவிப்பு வெளியிட்டது.

உயா்நிலைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கூறுகையில், ‘பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறோம். சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி.) அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்கும் வரை பிரஜ்வல் ரேவண்ணா மீதான இடைநீக்க நடவடிக்கை அமலில் இருக்கும். குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவா் நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்கப்படுவாா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com