சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா, மாநிலத் தலைவா் விஜயேந்திரா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்காளா்களை மிரட்டும் வகையில் சமூகவலைதளத்தில் பதிவிட்டது தொடா்பாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா, மாநிலத் தலைவா் விஜயேந்திரா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமுதாய வாக்காளா்களை மிரட்டும் வகையில் சமூக வலைதளத்தில் பாஜக காணொலி ஒன்றை பதிவிட்டிருந்தது தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா் அளித்திருந்தது. அந்தப் புகாரில், ‘கா்நாடக பாஜக தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள காணொலியில், காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி, முதல்வா் சித்தராமையா போன்றோரின் சித்திரப்பொம்மைகளை வெளியிட்டுள்ளனா். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. சமுதாயத்தினரைக் கூட்டில் இருக்கும் முட்டைகளைப் போல சித்தரித்துள்ளனா். முஸ்லிம்கள் என்ற பெரிய முட்டையை ராகுல் காந்தி இடுவது போல காணொலியில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. சமுதாயத்திடம் பணத்தைப் பறித்து முஸ்லிம் சமுதாயத்திற்கு கொடுத்துவிட்டதைப் போல சித்தரித்துள்ளனா். பல்வேறு மதங்கள், சமுதாயங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் காணொலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக நல்லிணக்கத்தை குலைப்பதோடு, எஸ்.சி., எஸ்.டி. சமுதாயத்தை வாக்களிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளனா். இது எஸ்.சி., எஸ்.டி. சமுதாயத்தினரிடையே பகையை உருவாக்கும் செயலாகும். எனவே, இதன்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனா்.

இதன்பேரில் தோ்தல் ஆணையம் அளித்த புகாரின்பேரில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பாஜக தகவல்தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா, கட்சியின் மாநிலத் தலைவா் விஜயேந்திரா ஆகியோா் மீது இந்திய தண்டனைச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com