கடுமையான உணவுப் பஞ்சம் வரும்...

பயணவழிப் பாதையில் இளைப்பாற ஈரம் இருக்கின்ற இடங்களைப் பார்த்து நிழல் தரும் மரங்களையும், சுமை தாங்கிகளையும் நிறுவி மனித நேயம் வளர்த்த பண்பாளர்கள் வாழ்ந்த இந்த மண்ணில், நான்கு வழிச்சாலை என்பதன் பெயரால் த

பயணவழிப் பாதையில் இளைப்பாற ஈரம் இருக்கின்ற இடங்களைப் பார்த்து நிழல் தரும் மரங்களையும், சுமை தாங்கிகளையும் நிறுவி மனித நேயம் வளர்த்த பண்பாளர்கள் வாழ்ந்த இந்த மண்ணில், நான்கு வழிச்சாலை என்பதன் பெயரால் தமிழகத்தின் எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும் இருந்த ஆயிரக்கணக்கான மரங்களைச் சாய்த்து மொட்டைப் பாதைகளாக மாற்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு, புவி வெப்பமடைவது மேலும் தீவிரமாகிவிடுமே என்று ஒருபோதும் கவலைப்பட்டதாய்த் தெரியவில்லை.

  இந்தப் பாதைகளில் பயணிப்பது அக்கினி குண்டத்தில் பாய்வதைப்போல இருப்பதால் தேர்தல் வேலைகளில் இப்போது ஈடுபட்டுள்ள சாமானியத் தொண்டர்கள் வெம்பி வருத்தம் அடைகின்றனர்.

  சாலைகளை அகலப்படுத்துகிறபோது கிராமங்களுக்கெல்லாம் தவறாமல் புறவழிச்சாலைகளை அமைக்க வேண்டும், பாதையின் இரு புறங்களிலும் 15 மீட்டர் அகலத்துக்கு மரம் வளர்ப்பு, விவசாயம் ஆகியவை தவிர வேறு எந்தக் கட்டுமானங்களையும் எழுப்ப நிரந்தரத் தடை விதிக்க வேண்டும், அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக சாலையோரங்களில் புதிதாக மரம் நட்டு பராமரிப்போருக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவுக்கும் அமைச்சருக்கும் 2007-ல் கிராமவாசிகள் சார்பில் அளிக்கப்பட்ட கருத்துருவுக்கு சிறிதளவும் மதிப்பும் முக்கியத்துவமும் தரப்படவில்லை.

  ஜப்பான் நாட்டு அரசாங்கம், தன்னுடைய நாட்டில் வேலை இழந்தோரையும், வேலைக்குத் தயாரானோரையும் விவசாய வேலைகளில் ஈடுபடுமாறும் கூறி அதற்கான ஊதியத்தை அரசாங்கமே வழங்கும் என்று அண்மையில் அறிவித்துள்ளது. இதன் மூலம் உணவு உற்பத்தியில் தேக்கநிலை முற்றிலுமாய் துடைத்தெறியப்பட்டிருக்கிறது; உணவுப் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

  ஆனால் நம் நாட்டிலோ உலகப் பொருளாதார நெருக்கடிகள் கழுத்தை நெரிக்கின்ற நிலைக்கு வந்தும்கூட நமது அரசாங்கங்கள் திருந்தவே இல்லை.

  நடப்பு ஆண்டில் மத்திய அரசு பற்றாக்குறை வரவு-செலவு திட்டத்தையே (பட்ஜெட்) தந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கியிலிருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனாகப் பெறப்பட்டது. இந்த ஆண்டு அது 40 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது. ஊழலும் ஆடம்பரச் செலவும் அடங்கினபாடில்லை.

  அரசின் குறைந்தபட்ச 100 நாள் வேலை திட்டத்தினால், விவசாய வேலைகளும் கிராமத் தொழில்களும் பாதிப்படைந்துள்ளன. உண்மையிலேயே மக்களுக்குப் பயன்படக்கூடிய, விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் வேலைகள் அதில் மேற்கொள்ளப்படுவதில்லை. அதே சமயம், முக்கியமான விவசாயப் பருவத்தில் விவசாயத் தொழிலாளர்களை திசை திருப்பும் வகையில் உணவு உற்பத்திக்கு உதவாத வேலைகளில் அவர்களை ஈடுபடுத்தும் போக்கே நிலவுகிறது. இந்த வேலைகளிலும் ஊழலும் சுயநலமும்தான் தலைதூக்கி நிற்கின்றன.

  மத்திய, மாநில அரசுகளின் கடன் நிவாரணங்கள் சாமானிய விவசாயிகளைத் தொடவில்லை. நேர்மையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு வெறும் நாமம்தான். இத்திட்டத்தில் ஏழை விவசாயிகளைவிட அரசுடைமை வங்கிகளில் கடன்பெற்ற பணக்கார விவசாயிகளே அதிகம் பயன்பெற்றார்கள்.

  அரசு ஊழியர்கள், அவர்களுடைய குடும்பத்தாரின் வாக்குகளை மொத்தமாக வாங்கிவிட வேண்டும் என்பதை உள்ளடக்கி, அரசாங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளையும் நிலுவைப் பட்டுவாடாக்களையும் ரூ.4,700 கோடிக்கு அண்மையில் செலவிட்டுள்ளது மாநில அரசு. வேலைவாய்ப்பு அலுவலங்களில் ""பதிவு செய்துள்ளோருக்கு'' மானியமாக ரூ.160 கோடி வழங்கியிருக்கிறது. அவர்கள் அனைவரும் ஆண்டுக்கு தலா ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறதா? மண்ணையும் நீரையும் எதிர்காலச் சந்ததிக்காக காப்பாற்றி வைக்க வேண்டும் என்ற ஜப்பானிய அரசின் அக்கறை இவர்களிடம் இல்லாதது ஏன்?

  ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச வேட்டி, சேலை முதலானவற்றை வரம்பு இல்லாமல் வோட்டுக்காகவும் இதர பணப் பயன்களுக்காகவும் வழங்கும் கருணாநிதி அரசின் சுயநலத்துக்கான விலையாக, ஆண்டுக்கு ரூ.7,000 கோடி வட்டியாக மட்டும் செலுத்தப்படுகிறது.

  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கால்வாய்களுக்கு நீரைத் தந்துவரும் காவிரியின் கிளை ஆறுகள் மற்றும் முதல்நிலை வாய்க்கால்களில் வயல் மட்டத்தைக் காட்டிலும் மேடிட்டுள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவற்றைத் தூர் எடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை வலுப்படுத்தவும் சொல்லியதை நிறைவேற்றவில்லை; மாறாக, மேட்டிலிருந்து பள்ளம் நோக்கிப் பாயும் சிற்றாறுகளையும் ஓடைகளையும் வடிகால்களையும் தூர் எடுத்துள்ள செயல்கள் பலரது "பர்சன்டேஜ் கமிஷன்' மோகத்தைத் தணிப்பதற்காகவே என்று முடிவு செய்ய வேண்டியுள்ளது.

  தொன்றுதொட்டு பாசன உரிமைகள் கொண்டுள்ள காவிரி நெல் சாகுபடிக்கு முன்பு நிகழ்ந்துள்ள பாதிப்புகளோடு புதிதாக சில பாதிப்புகளும் இப்போதைய ஆட்சியில் அதிகரித்து வருகின்றன.

   மேட்டூரிலிருந்து கல்லணை வரையிலும் உள்ள இரு கரைகளிலும் நீரேற்றுப் பாசன வசதிகளுக்குத் தொடர்ந்து அனுமதி தரப்படுகிறது; காவிரிப்படுகை குடியிருப்புகளுக்கே குடிநீர்த் தட்டுப்பாடு இருக்க 100 கிலோ மீட்டர் தொலைவுகளுக்கு அப்பால் உள்ள பிரதேசங்களுக்கும் காவிரியிலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இவையெல்லாம் அரிசி உற்பத்திக்கு எதிரான, சுயநல நடவடிக்கைகளாகும். காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அரசைவிடவும் தமிழக அரசு செய்துவரும் எதிர்மறையான செயல்களே அதிகம் என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

  அறுவடையில் தங்களுக்கு என்று ஒரு பகுதியையாகிலும் இருப்புவைத்த விவசாயிகள் விளைந்த மொத்த கோதுமையையும், நெல்லையும் இப்போது விற்றுவிடுகின்றனர். இதனாலேயே அரசு கொள்முதல் தானிய இருப்பு அதிகமாகியுள்ளது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ என்கிற அளவுக்கு தானியத்துக்கு மதிப்பு இல்லாமல் செய்கிறபடியால் இருப்பு வைப்பது ஏமாளித்தனம் என்ற முடிவுக்கு விவசாயிகள் வந்துவிட்டனர். ஆனால் எதிர்காலத்தில் இதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கப் போகின்றன.

  சேமிப்பு யுக்திகளிலும் பராமரிப்பிலும் வழக்கம்போல கோட்டைவிடும் அரசு நிர்வாகம், பெரும்பகுதி தானியத்தை இனி உண்ணும் தரத்துக்குக் கீழே தள்ளப்போவது உறுதி. இதனால் உணவு விநியோகத்தில் பெரும் பற்றாக்குறை வரும்; அடுத்த அறுவடைகளில் தொய்வுகள் ஏற்படும்; அதன் பிறகு உணவுதானிய பற்றாக்குறை அதிகரித்து உணவுப் பஞ்சம் கடுமையாக வரப்போவது உறுதி.

  நம் நாட்டின் வடகிழக்கு திசையில் உள்ள அருணாசலப்பிரதேச மாநில நீர்மின் திட்டத்துக்காக கடன் தருவதாய் ஆசிய வங்கி அறிவித்திருந்தது. அந்த திட்டம் அமையப்போகும் இடம் தங்களுடைய நிலப்பகுதியில் இருக்கிறது என்று கூறி ஆசிய வங்கியின் நிர்வாகிகள் கூட்டத்தையே ரத்து செய்ய வைத்துவிட்டது சீன அரசு. நம்முடைய நாட்டின் 90 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பை, ""தன்னுடையது'' என்று சொல்லி வருகிறது சீனா. அதுவே உலக வரைபடத்தில் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

  ஆளுமை என்பது தமிழகத்தில் காணாமல் போயிருப்பது போலவே, மத்திய அரசிலும் இல்லாமல் போய் பலகாலம் ஆகிவிட்டது. இனி மக்கள்தான் விழிப்படைய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com