சென்னைத் துறைமுகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

சென்னைத் துறைமுகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் நீடிப்பதால் பொருள்களை ஏற்றி, இறக்குவதில் அதிக காலதாமதம் ஏற்படுகிறது.
சென்னைத் துறைமுகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

சென்னைத் துறைமுகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் நீடிப்பதால் பொருள்களை ஏற்றி, இறக்குவதில் அதிக காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் இந்தத் துறைமுகம் வழியாக பொருள்களை ஏற்றுமதி செய்து வந்த ஏற்றுமதியாளர்கள் வேறு துறைமுகங்களுக்கு மாறி வருகின்றனர்.

சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு 6.5 கோடி டன் அளவிற்கு சரக்குகள் கையாளப்படுகின்றன. துறைமுகத்தில் உள்ள இரண்டு முனையங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 18 லட்சம் கண்டெய்னர்கள் ஏற்றி இறக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால் அதற்கேற்ற வகையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாததால் கண்டெய்னர் லாரிகள், கனரக லாரிகள் உள்ளிட்டவைகளைக் கையாள்வதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டு, நெரிசல் இருந்து வருகிறது.

சுங்கத் துறை அலுவலர்கள் பற்றாக்குறை, குறைந்த எண்ணிக்கையிலான நுழைவு வாயில்கள், பாதுகாப்பு, சுங்கச் சோதனையில் ஏற்படும் அதிக கால தாமதம், போக்குவரத்துப் போலீஸôரின் மெத்தனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் துறைமுகத்திற்கு உள்ளே, வெளியே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

நுழைவு வாயில் சோதனையில் காலதாமதம்: சென்னைத் துறைமுகத்திற்கு தினமும் 5 ஆயிரம் கனரக வாகனங்கள் வந்து செல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் 14 நுழைவு வாயில்கள் வழியே போக்குவரத்துகள் நடைபெற்றன. ஆனால் தற்போது முதல் நுழைவு வாயில் (ழஉதஞ எஅபஉ) வழியாக மட்டுமே சுமார் 80 சதவீத போக்குவரத்து நடைபெறுகிறது. மீதமுள்ள வாயில்கள் அனைத்தும் கனரக வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசலுக்கு முதல் நுழைவு வாயிலில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பரிசோதனைகள்தான் மூல காரணம் எனவும், துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் நிறைவடைந்தால் பிரச்னை தீரும் எனவும் கூறப்பட்டன.

இதனையடுத்து முதல் நுழைவு வாயிலில் ஏற்கனவே இருந்து வந்த 2 வழிகளுக்குப் பதிலாக 6 வழிகளாக மாற்றப்பட்டன. அதேபோல் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டப்பணிகளும் ஓரளவு நிறைவடைந்து எண்ணூர் விரைவு சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும் துறைமுகத்தின் உள்ளே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

மேலும் பெரும்பாலான நாள்களில் மணலி, மாதவரம் வரை கண்டெய்னர் லாரிகள் நிற்கும் அவலநிலை தொடர்கிறது.

இடம் மாறும் ஏற்றுமதியாளர்கள்: 130 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னைத் துறைமுகம் தென் மாநிலங்களில் முதன்மை துறைமுகமாக இருந்து வந்தது. மும்பைக்கு அடுத்தபடியாக அதிக சரக்குகளைக் கையாளும் துறைமுகமாக தனித்தன்மையுடன் கோலோச்சியது.

மேலும் இத்துறைமுகத்திற்கு போட்டியிடும் விதமாக முன்பு வேறு துறைமுகங்கள் அருகில் இல்லை.

ஆனால் தற்போது நெல்லூர் அருகே கிருஷ்ணபட்டினம், மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி ஆகிய தனியார் துறைமுகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னைத் துறைமுகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதிக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளன.

மேலும் குறித்த காலத்திற்குள் சரக்குகளை அனுப்ப முடியவில்லை என்பதால் மக்காச்சோளம், மிளகாய், நிலக்கடலை உள்ளிட்ட விவசாய விளைபொருள்களை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களில் கணிசமானோர் கிருஷ்ணாபட்டினத்திற்கு மாறி விட்டனர்.

பாதியாகக் குறைந்த கிரானைட் ஏற்றுமதி: இதேபோல் சென்னைத் துறைமுகத்தின் மற்றொரு வர்த்தகமான கிரானைட் ஏற்றுமதியாளர்களும் வேறு துறைமுகங்களை நாடத் தொடங்கியுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக ஏறுமுகத்தில் இருந்து வந்த கிரானைட் ஏற்றுமதி, 13 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து கடந்த ஆண்டு 6 லட்சம் டன்னாகக் குறைந்தது.

இதற்கான காரணம் குறித்த ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் வேறு துறைமுகங்களை நாடிச் செல்ல துறைமுகத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல்தான் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் கவனம் செலுத்துவாரா?: சென்னைத் துறைமுகத்தின் முக்கிய சரக்கான நிலக்கரி, இரும்புத்தாது கையாள்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளதால் மூன்றில் ஒரு பங்கு வருவாய் குறைந்துவிட்டது.

எனவே தென் மாநிலங்களின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சென்னைத் துறைமுகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் வகையில் இத்துறைமுகத்தின் பிரச்னைகளில் கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சிறப்புக் கவனம் செலுத்தி, உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com