மழைநீர் வடிகால் கட்டுவதில் மந்தநிலை

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் கட்டுவதில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் இப்பிரச்னை மேலும் சிக்கலாகும் அபாயம் எழுந்துள்ளது.
மழைநீர் வடிகால் கட்டுவதில் மந்தநிலை

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் கட்டுவதில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் இப்பிரச்னை மேலும் சிக்கலாகும் அபாயம் எழுந்துள்ளது.

சுங்கச் சாவடியிலிருந்து எர்ணாவூர் மேம்பாலம்வரை சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு இச்சாலையை 65 அடி அகலத்துக்கு விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. சுமார் 10 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இத்திட்டத்துக்கு 2008-இல் அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த ஆண்டுதான் இத்திட்டப் பணி மீண்டும் புதுவேகம் பெற்றது. தற்போது நில ஆர்ஜிதம், தடுப்புச் சுவர், இருபுறமும் மழைநீர் கால்வாய், சாலைப்பணி உள்ளிட்டவைகளுக்காக சுமார் ரூ.45 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பணிகளில் தொய்வு: நான்கு பிரிவுகளாக டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காலடிப்பேட்டை முதல் திருவொற்றியூர் மார்க்கெட்வரை இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பிரச்னைகள் எழுந்துள்ளன.

மின் கம்பிகள், கழிவு நீர் குழாய்கள், குடிநீர் குழாய்கள், தொலைத்தொடர்பு கேபிள்கள் உள்ளிட்டவை சாலையின் குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்றன. கட்டடங்களை ஒட்டி கால்வாய் அமைக்கப்படுவதால் கட்டடடங்கள் பாதிக்கும் என உரிமையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளன.

மண்டல அலுவலகம் அருகே கொசு உற்பத்தி: எல்லையம்மன் கோயில் மாநகராட்சி மண்டல அலுவலகம்வரை கால்வாய் அமைக்கப்பட்டு மேல்புறம் மூடப்பட்டுள்ளன. அவ்வப்போது பெய்த மழைநீர், அருகில் உள்ள உணவு விடுதி, வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் கால்வாய் முழுதும் நீண்ட நாள்களாகத் தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

பெரியார் நகர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, தனியார் வங்கி அருகே கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டும்போது பிரதான கழிவு நீர் குழாய் சேதமடைந்தது. இங்கு 5 அடி உயரத்துக்கு கழிவுநீர் தேங்கியுள்ளது. இக்கழிவு நீரை அகற்ற குடிநீர் வாரியமோ, நெடுஞ்சாலைத் துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை.

நடவடிக்கை எடுப்பது யார்? இது குறித்து சென்னை குடிநீர்வாரிய திருவொற்றியூர் பகுதி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கழிவுநீர் குழாயைச் சேதமடையச் செய்த நெடுஞ்சாலைத் துறைதான், உடைப்பைச் சரி செய்ய வேண்டும் என்றார்.

கொசுக்களை ஒழித்து சுகாதாரத்தைப் பேண வேண்டியது மாநகராட்சி சுகாதாரத் துறையின் பணியாகும். ஆனால் கழிவுநீர் கால்வாயில் கொசுக்கள் வளருவதைத் தடுப்பது குறித்து கேட்டால் நெடுஞ்சாலைத் துறை இன்னும் ஒப்படைக்கவில்லை என காரணம் தெரிவிக்கின்றனர்.

தொடர் மழை பெய்தால்... சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைய 6 மாதங்கள்வரை ஆகும் என நெடுஞ்சாலைத் துறை தரப்பில் கூறப்படுகிறது.

தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழையின்போது பணி முடித்த வடிகால் பகுதி, வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கும். பாதாளச் சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் இதில் கலக்கும். இதனால் தொற்றுநோய் பரவும். எனவே, வருமுன் காக்கும் வகையில் தொடர்புடைய துறை அதிகாரிகள் சேர்ந்து மாற்றுச் செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்கிறார் நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி என்.துரைராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com