அதிகாரிகளின்றி இயங்கும் அம்பத்தூர் மண்டல அலுவலகம்

அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதால் அப்பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் முடங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதிகாரிகளின்றி இயங்கும் அம்பத்தூர் மண்டல அலுவலகம்

அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதால் அப்பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் முடங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நகராட்சியாக இருந்த அம்பத்தூர், கடந்த 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

அம்பத்தூர் மண்டலத்தின் கீழ் 15 வார்டுகள் உள்ளன. பாடி, கொரட்டூர், முகப்பேர் கிழக்கு, மண்ணூர்பேட்டை, அத்திப்பட்டு, கிருஷ்ணாபுரம், புதூர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன.

இப்பகுதிகளில் சுமார் மூன்றரை லட்சம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

பல்வேறு தொழிற்சாலைகள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள், நெசவு ஆலைகள் என தொழிற்பேட்டைகள் நிறைந்த பகுதியாக அம்பத்தூர் விளங்குகிறது.

இதனால் சென்னையின் முக்கியப் பகுதிகளில் ஒன்றாக அம்பத்தூர் உள்ளது.

மண்டலக் கூட்டங்கள் இல்லை:சென்னை மாநகாட்சியுடன் இணைந்தது முதல், அம்பத்தூர் மண்டலம் உருவானது.

ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் ஒரு மண்டலக் கூட்டம் கூட இங்கு நடைபெறவில்லை.

சென்னை மாநகராட்சி தேர்தலின் போது அம்பத்தூரில் உள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளை அதிமுகவும், 4 வார்டுகளை திமுகவும், மீதமுள்ள 1 வார்டினை காங்கிரஸýம் கைப்பற்றின.

இந்நிலையில் அம்பத்தூர் மண்டலத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஜோசப் சாமுவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால் அதிருப்தியுற்ற அதிமுகவினர், மண்டலக் கூட்டங்களைப் புறக்கணித்ததால், கூட்டம் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.

பணிகள் முடக்கம்... ÷பொதுவாக மண்டலக் கூட்டத்தில் திட்டப்பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். அவை மாநகராட்சியின் ஒப்புதல் பெற்ற பின்னரே அதற்கான நிதி, மண்டலங்களுக்கு ஒதுக்கப்படும். இந்நிலையில் அம்பத்தூர் மண்டலத்தில் கூட்டங்கள் நடைபெறாததால் பல்வேறு நலத்திட்டப் பணிகள் முடங்கியுள்ளன.

போதிய அதிகாரிகளும் இல்லை... அரசியல் ரீதியான காரணங்களால் ஒருபுறம் திட்டப்பணிகள் முடங்கியுள்ள நிலையில், மறுபுறம் போதிய அதிகாரிகள் இல்லாததாலும் சாலை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் கடந்த 4 மாதங்களாக மண்டல அதிகாரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

மண்டல அதிகாரிக்கு பதிலாக செயற்பொறியாளரே, கூடுதலாக இந்த பொறுப்பை கவனித்து வருகிறார். இதனால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் பணிகள் ஸ்தம்பித்துள்ளது.

இதே போல், உதவிச் செயற்பொறியாளர்கள் 5 பேரில், 2 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் மற்ற 3 அதிகாரிகளின் பணிகளை இவர்களே செய்ய வேண்டியுள்ளது.

இளநிலை பொறியாளர்கள் 15 பேரில் 8 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் அன்றாடப் பணிகளை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு, மக்கள் திட்டப்பணிகளில் கவனம் செலுத்த முடிவதில்லை என சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பல அதிகாரிகள் இல்லாததால் வரி வசூல், சுகாதாரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட திட்டப்பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

நோய் பரவும் அபாயம்: தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல மண்டலங்களில் வெள்ளத்தடுப்புப் பணிகள், நோய் தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அம்பத்தூர் மண்டலத்தில் சுகாதார அலுவலர்கள், பணியாளர்களின் பற்றாக்குறையால் பல பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் போதிய அதிகாரிகளை நியமித்து, அங்கு முடங்கிக் கிடக்கும் திட்டப்பணிகளையும் விரைவுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம்கபூர் கூறியது:

அம்பத்தூர் மண்டலத்தில் கடந்த 4 மாதங்களாக அதிகாரிகள் இல்லை. தற்போது தாற்காலிகமாக பொறுப்பு அதிகாரியாக உள்ளார். சென்னை மாநகராட்சியில் மூன்று ஆண்டுகள் செயற்பொறியாளராக பணி முடித்தவர்களைதான் மண்டல அதிகாரியாக நியமிக்க முடியும்.

ஆனால், சென்னை மாநகராட்சியில் அதற்கான தகுதியானவர்கள் தற்போது இல்லை.

தற்போது பணியில் உள்ளவர்கள், பதவி உயர்வு மற்றும் ஓய்வில் சென்றுவிடுவதால் அந்த இடங்களில் புதிய ஆள்களை நியமிக்க தாமதமாகிறது. காலியாக உள்ள இடங்களில் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என்றார்.

அம்பத்தூர் மண்டல அலுவலகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com