"உயர் நீதிமன்றம் உள்பட பல இடங்களில் பி.எஸ்.என்.எல். சிக்னல் இல்லை'
By dn | Published On : 07th February 2014 03:16 AM | Last Updated : 07th February 2014 03:18 AM | அ+அ அ- |

சென்னை உயர் நீதிமன்ற வளாகம் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் பி.எஸ்.என்.எல். சிக்னல் சரியாக கிடைப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால் பி.எஸ்.என்.எல். மொபைல் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பலர் தனியார் தொலை தொடர்பு சேவைக்கு மாறி வருகின்றனர்.
உயர் நீதிமன்ற வளாகம், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம், நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை, மற்றும் பல அரசு அலுவலகங்களிலும் பி.எஸ்.என்.எல். சிக்னல் சரிவரக் கிடைப்பதில்லை எனக் குற்றச்சாட்டு நிலவுகிறது.
உயர் நீதிமன்றத்தில் சிக்னல் கிடைக்காதது குறித்து பி.எஸ்.என்.எல் (சென்னை) தலைமை பொது மேலாளருக்கு, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அண்மையில் புகார் அனுப்பியுள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். மொபைல் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக சுமார் 2000 மொபைல் டவர்களை நிறுவியுள்ளதாக பி.எஸ்.என்.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களிடம் பல்வேறு மறைமுகக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்களைக் காட்டிலும் அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இதனால் அரசு அதிகாரிகள், ஊழியர்கள், வழக்குரைஞர்கள், நீதிபதிகள், போலீஸார், பொதுமக்கள் என பலரும் பி.எஸ்.என்.எல். மொபைல் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சேவை சிறப்பாக இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. எழும்பூரில் செயல்பட்டு வந்த சென்னை மாநகர காவல்துறை ஆணையரின் பழைய அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல். சிக்னல் சரியாகக் கிடைப்பதில்லை என புகார் அளிக்கப்பட்டது. அதே போல வேப்பேரியில் உள்ள புதிய அலுவலகத்திலும் சிக்னல் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் மாசிலாமணி அண்மையில் பி.எஸ்.என்.எல். (சென்னை தொலைபேசி) தலைமை பொது மேலாளர் பாலசுப்ரமணியனுக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் பி.எஸ்.என்.எல். சிக்னல் சரியாகக் கிடைப்பதில்லை என்ற தகவல் பார் கவுன்சிலைச் சேர்ந்த பல வழக்குரைஞர்கள் மற்றும் நீதிபதிகள் மூலமாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அத்தகைய அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் மற்ற சேவைக்கு மாற வேண்டிய சூழல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் டவர்கள் முறையாக பராமரிக்கப்படாததால் தான் பல இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை என்று பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர். உயர் நீதிமன்ற வளாகம் மற்றும் பிற இடங்களில் உள்ள சிக்னல் பிரச்னை குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கூறியது:- உயர் நீதிமன்ற வளாகத்தின் ஒரு சில இடங்களில் சிக்னல் கிடைக்காமல் இருக்கலாம். புகாரின் பேரில் அத்தகைய இடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிக்னல் கிடைக்காத இடங்களில் பூஸ்டர் கருவி பொருத்தப்பட்டு அலைவரிசை மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.
பி.எஸ்.என்எல். (சென்னை) தலைமை பொது மேலாளருக்கு அனுப்பப்பட்ட புகார் கடிதம்.