உணவு ஒவ்வாமை: 27 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் நேரில் உடல் நலம் விசாரிப்பு

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்களின் உடல் நலம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர்
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவர்கள்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவர்கள்.

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்களின் உடல் நலம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை (ஏப்.17) நேரில் கேட்டறிந்தார்.
கும்மிடிப்பூண்டி குமரன்நாயக்கன்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் மதிய உணவைச் சாப்பிட்ட 27 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அவர்கள் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஏப்.16) அனுமதிக்கப்பட்டனர்.
18 சிறுவர்கள் மற்றும் 9 சிறுமிகளும் பள்ளிக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து எழும்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 
இதனையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பள்ளியில் இருந்து எண்ணெய், உப்பு, தண்ணீர் ஆகியவற்றின் மாதிரிகளை ஆய்வுக்கான சேகரித்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 25 பேர் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினர். இது தொடர்பாக மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் ரகுநாதன் கூறுகையில், 14 குழந்தைகள் வாந்தி காரணமாகவும், மீதம் உள்ள குழந்தைகள் குமட்டல் உணர்வு மற்றும் தலை சுற்றலுக்காகவும் அனுமதிக்கப்பட்டனர். உணவு ஒவ்வாமையினால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2 குழந்தைகள் மட்டும் தற்போது கண்காணிப்புக்காக மருத்துவமனையில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சய் என்ற மாணவர் கூறுகையில், பள்ளியில் எங்களுக்கு வெஜிடபிள் சாதமும் அவித்த முட்டையும் மதிய உணவாக வழங்கப்பட்டது. சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் வாந்தி மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டது. 
பள்ளியில் சில மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆனால், வாந்தி நிற்கவில்லை. பின்னர் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது மேலும் எனக்கும் வாந்தி அதிகரித்ததால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டேன் என்றார். 
அமைச்சர் ஆய்வு: சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி சிறுவர்களின் உடல் நிலை குறித்து நேரில் சென்று கேட்டறிந்தார். தொடர் கண்காணிப்பில் உள்ள இரண்டு மாணவர்களுக்கும் தேவையான சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com