சென்னையில் 515 பேருக்கு டெங்கு; 6,288 பேருக்கு சிகிச்சை: உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சென்னையில் 515 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்


கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சென்னையில் 515 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஏ.பி. சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனைப் பரப்பும் கொசுக்களைக் கட்டுப்படுத்தத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கவில்லை. மேலும் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கக்கூடிய கால்வாய்களை சரிவர சுத்தம் செய்து பராமரிப்பதும் இல்லை. எனவே டெங்கு கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த வழக்கை கடந்த 2017-ஆம் ஆண்டு விசாரித்த உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவுக்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதில்மனு தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், சென்னை மாநகராட்சியின் சார்பில் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 60 மெட்ரிக் டன் அளவிலான கழிவுகள் அகற்றப்படுகிறது. மாநகர் முழுவதும் கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்க 587 தெளிப்பான் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதுவரை 8 ஆயிரத்து 266 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த இலவச மருத்துவ முகாம்களின் மூலம் சுமார் 4 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். காய்ச்சலுக்காக 6 ஆயிரத்து 288 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 
கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் சென்னையில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. டெங்கு கொசுக்களின் இனப் பெருக்கத்தை தடுக்கும் வகையில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டாத தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பி.சதீஷ்குமார், மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 515 பேர் என்ற எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை மட்டுமே, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும். எனவே அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில்மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com