பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் புகார் குழு கட்டாயம்

சென்னையில் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பாலியல் வன்முறை சட்டம் 2013 விதிகளின்கீழ் கட்டாயமாக புகார் குழு அமைக்க வேண்டும் என

சென்னையில் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பாலியல் வன்முறை சட்டம் 2013 விதிகளின்கீழ் கட்டாயமாக புகார் குழு அமைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பட்டறை மற்றும் ஆலைகள், குடிசைத் தொழில் பட்டறைகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், ஜவுளிக் கடைகள், தொழிற்சாலைகள், ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மென்பொருள் அலுவலகங்களில் பாலியல் வன்முறை சட்டம் 2013 விதிகளின் கீழ் கட்டாயமாக தங்கள் அலுவலகங்களில் உள் புகார் குழு அமைத்து அதன் விவரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறிக்கை தர வேண்டும்.
அதில் சமூகப் பணியில் அனுபவம் அல்லது சட்ட அறிவு பெற்ற பணியாளர்கள் இருவரும், மகளிர் நலனுக்கான தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும். மொத்த உறுப்பினர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பெண்களாக இருத்தல் வேண்டும். 
அந்நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஏதேனும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் இருப்பின், சம்மந்தப்பட்டவர்கள் உள் புகார் குழுவிடம் புகார் அளிக்கலாம். இக்குழு அந்த புகார் மீது விரிவான விசாரனை நடத்தி, உரிய ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும் புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காலாண்டுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
மேலும் பெண்கள் விடுதிகள் நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கட்டாய பதிவு செய்ய வேண்டும். முதியோர் இல்லங்கள் நடத்தும் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல விதிகள் 2009-ன் கீழ் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் மற்றும் அரசானை எண்.83 சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, நாள் 23.11.2016-ன் படி இல்லங்களை பராமரிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சென்னை - 1 முகவரியில் 8-வது தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com