கழிவெளி புறம்போக்கு பள்ளத்தில் அடுக்கு மாடி வீடுகள்: நீர்நிலைகளில் அரசே குடியிருப்புகளை கட்ட எதிர்ப்பு

திருவொற்றியூர் கார்கில் நகரில் மழைநீர் தேங்கும் கழிவெளி புறம்போக்கு பள்ளத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 10 அடுக்குகள் கொண்ட மாடி வீடுகளைக் கட்டும் பணியை தொடங்கியுள்ளது.
கடந்த மழை வெள்ளத்தில் மிதந்த கார்கில் நகர்.
கடந்த மழை வெள்ளத்தில் மிதந்த கார்கில் நகர்.


திருவொற்றியூர் கார்கில் நகரில் மழைநீர் தேங்கும் கழிவெளி புறம்போக்கு பள்ளத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 10 அடுக்குகள் கொண்ட மாடி வீடுகளைக் கட்டும் பணியை தொடங்கியுள்ளது. இதற்கு பொதுமக்கள் சாலை மறியல், முற்றுகை போராட்டங்களை நடத்தி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
திட்டத்தின் பின்னணி: மத்திய அரசின் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் திருவொற்றியூர் கார்கில் நகரில் ரூ.135 கோடி செலவில் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் வாடகை வீடுகளில் வசிக்கும் பின்தங்கிய பொருளாதார சூழல் கொண்ட சுமார் 1,200 குடும்பங்களுக்கு அடுக்குமாடி வீடுகளைக் கட்டும் பணியை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தொடங்கியுள்ளது.
இதற்கென கார்கில் நகரில் பக்கிங்ஹாம் கால்வாயையொட்டி சுமார் 6 ஏக்கர் காலி நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு நாமக்கல் பகுதியைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு கட்டுமான பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 10 அடுக்குகள் கொண்ட அடுக்கு மாடி வீடுகள், வாகன நிறுத்தங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. வாடகை வீடுகளில் வசிக்கும் சுமார் 28 ஆயிரம் பேர் ஏற்கெனவே விண்ணப்பம் செய்துள்ளதாகவும், இவற்றில் 1,200 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் இலவசமாக ஒப்படைக்கப்படும் என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கழிவெளி புறம்போக்கு இடத்தில்: இந்த இடம் வருவாய்த் துறை ஆவணங்களின்படி கழிவெளி புறம்போக்கு வகையைச் சார்ந்ததாகும். இப்பகுதி மழைநீர் அனைத்தும் கடைசியாக வந்து தேங்கி, சேறும், சகதியுமாகக் காட்சியளிப்பது வழக்கம். 15 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் பெரும்பாலான இடம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சாலை, மின்வசதி, குடிநீர் வசதி இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதுவரை அவர்கள் வெளியேற்றப்படவில்லை.
2004 டிசம்பர் 26-இல் சென்னை மாநகரை ஆழிப்பேரலை தாக்கியது. இதனால் வீடுகளை இழந்தவர்களுக்கு புறநகர்களில் உடனடியாகக் குடியமர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இங்கு வீடு கட்ட முயற்சி எடுக்கப்பட்டது. எப்போது மழை பெய்தாலும் கார்கில் நகர் வெள்ளத்தில் மிதக்கும் என்பதால் இங்கு வீடுகள் கட்டுவதை யாரும் ஏற்கவில்லை. 
கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்: இதுகுறித்து இப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் மதியழகன் கூறியது:
கார்கில் நகர் அருகில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தற்போது வீடுகள் கட்டப்பட்டு வரும் இப்பகுதி தொடர்ந்து மழைநீர் தேங்கும் பகுதியாகவே இருந்து வந்தது. ஆனால் சில சமூக விரோதிகள் இந்த அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து அப்பாவி பொதுமக்களிடம் விற்று ஏமாற்றியுள்ளனர். நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களை வெளியேற்ற வேண்டிய அரசு, அப்பகுதியிலேயே அடுக்குமாடி வீடுகள் கட்டுவது எவ்விதத்திலும் நியாயமில்லை என்றார் மதியழகன்.
எர்ணாவூரில் அரசுக்குச் சொந்தமான சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் 6 ஆயிரம் அடுக்குமாடி வீடுகளை குடிசை மாற்று வாரியம் கட்டியுள்ளது. இவற்றில் 70 சதவீத வீடுகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் விற்றுவிட்டனர். இந்நிலையில் மீண்டும் 1,200 வீடுகள் எதற்காக இவ்வளவு அவசர கோலத்தில் கட்டப்படுகின்றன என்று தெரியவில்லை என்று வடசென்னை நல உரிமை கூட்டமைப்பு மூத்த நிர்வாகி ஜி.வரதராஜன், நுகர்வோர் விழிப்புணர்வு சங்க நிர்வாகிகள் என்.துரைராஜ், கே.எஸ்.சுப்பிரமணி ஆகியோர் கூறினர்.
அதிகாரிகள் கருத்து: இந்த நிலம் வருவாய்த்துறை ஆவணங்களின்படி கழிவெளிப் புறம்போக்கு வகையைச் சார்ந்தது. சேறும், சகதியாகவும் இப்பகுதியில் மண் எப்போதும் இலகுவாகவே இருக்கும். இதற்கான நில உரிமை மாற்றம் ஏதும் குடிசை மாற்று வாரியத்துக்கு வருவாய்த் துறை சார்பில் செய்துத் தரப்படவில்லை. இந்நிலம் காலியாக இருப்பதே இப்பகுதிக்கு நன்மையாக அமையும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு எங்கு வீடுகளை கட்ட உத்தரவிடுகிறதோ அங்கு வீடுகளை அமைப்பதுதான் எங்கள் வாரியத்தின் கடமை. நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்ட பிறகே வீடுகளைக் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம் முன்பு நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது என்று குடிசை மாற்று வாரியம் தரப்பில் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com