கடும் எதிர்ப்புக்கிடையே இன்று திறக்கப்படும் துறைமுக இணைப்புச் சாலைகள் திட்ட சுங்கச் சாவடி...! : சுமார் 10 கி.மீ. சுற்றளவில் 3 சுங்கச் சாவடிகளா?  பொதுமக்கள் கேள்வி

சென்னை, எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டத்திற்கான செலவுகளை ஈடுகட்டும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அமைக்கப்பட்ட மாத்தூர் சுங்கச் சாவடி பொதுமக்கள், லாரி
சென்னை, எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டத்திற்கான செலவுகளை ஈடுகட்டும் வகையில் புதன்கிழமை செயல்பாட்டுக்கு வரவுள்ள மாத்தூர் சுங்கச் சாவடி.
சென்னை, எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டத்திற்கான செலவுகளை ஈடுகட்டும் வகையில் புதன்கிழமை செயல்பாட்டுக்கு வரவுள்ள மாத்தூர் சுங்கச் சாவடி.


சென்னை, எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டத்திற்கான செலவுகளை ஈடுகட்டும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அமைக்கப்பட்ட மாத்தூர் சுங்கச் சாவடி பொதுமக்கள், லாரி உரிமையாளர்களின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே புதன்கிழமை செயல்பாட்டுக்கு வருகிறது. 
திட்டத்தின் பின்னணி:
ரூ.650 கோடி மதிப்பீட்டிலான சாலைத் திட்டம்: 
சென்னை, எண்ணூர் துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்பதற்காக ரூ.650 கோடி மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.   இதில், சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக அரசு ஆகியவை பங்குதாரர்களாக இணைக்கப்பட்டன.  எண்ணூர் விரைவு சாலை, திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்சட்டி நெடுஞ்சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலை உள்ளிட்ட சாலைகள் ஆறு வழிச்சாலையாக நவீன வடிவமைப்பில் அகலப்படுத்துதல்,  கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவுகள் அமைத்தல், சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம், மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுதல், பாலங்கள், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள்  அடங்கும்.
1998-ல் இத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும், 2011- ஜனவரியில்தான் அன்றைய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஜி.கே.வாசனால்  திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.   ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,  மறுகுடியமர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் சுமார் 8 ஆண்டுகளாகத் தொடரும் இத்திட்டம் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.  இத்திட்டத்தின் செலவினங்களை ஈடுகட்டும் வகையில் வாகனங்களுக்கு கட்டணங்களை வசூலிக்க சுங்கச் சாவடி அமைப்பதே திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இதன்படி, மாதவரம் மணலி இடையேயான உள்வட்டச் சாலையில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. செல்வதற்கு நான்கும், வருவதற்கு நான்கும் என எட்டு நுழைவு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டண விகிதங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கார்-ரூ.35, இலகு ரக வாகனம்-ரூ.55, பேருந்து ரூ.115, மூன்று அச்சுகள் கொண்ட லாரிகள் ரூ.125, பல்அச்சு கனரக வாகனங்கள் ரூ.180 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இச்சுங்கச் சாவடியை நிர்வகிப்பது யார் என்பதில் மத்திய, மாநில அரசுகளிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததால்,  திறப்பதில் கால தாமதம் இருந்து வந்தது. மேலும் துறைமுகங்களின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட சாலைகளில் அனைவருக்கும் கட்டணம் வசூலிப்பதற்கு மாநில அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் வழக்கமான நடைமுறைகளின்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் லாரி, உரிமையாளர்கள் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். 
    இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சுகுமார், டிரைலர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பெருமாள், செயலாளர் ராஜா ஆகியோர் கூறியதாவது,       சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி என மூன்று துறைமுகங்களின் வளர்ச்சிக்காகவே இச்சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. 
மேலும் திட்டம் அறிவிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகளைக் கடந்து விட்டது.  தற்போது  3 துறைமுகங்களிலும் ஆண்டுக்கு ரூ.1,500 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெறுகின்றன. இத்துறைமுகங்களை நம்பி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள், கனரக வாகனங்கள் உள்ளன. லட்சக் கணக்கான தொழிலாளர்கள் இத்துறைமுகங்களை நம்பியுள்ளனர்.  எனவே இத்துறைமுகங்களின் திட்டச் செலவுகளை  துறைமுக நிர்வாகங்கள்தான் ஏற்க வேண்டும். இதில் மத்திய,  மாநில அரசுககள், பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இதில் முதலீடு செய்துள்ளன. மேலும் சாலை வரியாக ஆயிரக்கணக்கான தொகையை லாரி உரிமையாளர்கள் செலுத்துகின்றனர். ஏற்கனவே தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் மதுரவாயல்,  அம்பத்தூர் சுங்கச் சாவடிகளிலும், ஆந்திரா உள்பட வடமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் செங்குன்றத்திலும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.  துறைமுகங்களுக்குச் செல்ல சாலைகள் அமைக்கப்பட்டும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை, தொடரும் நெரிசல்கள், ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் மந்தம், உயர்ந்து வரும் தளவாடச் செலவுகள் போன்றவற்றால் லாரி தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சுமையை ஏற்றி தொழிலை நசுக்கப்படும் நிலையை தேசிய நெடுஞ்சாலை கவனத்தில் கொள்ள வேண்டும். 
எனவே சுங்கச்சாவடியை திறக்கக் கூடாது. மீறி திறந்ததால் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். லாரிகளை இயக்க மாட்டோம் என்றனர்.  
திருவொற்றியூரிலிருந்து தாம்பரம் செல்ல 3 இடங்களில் கட்டணம்:     இது குறித்து வடசென்னை நல உரிமைக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஜி.வரதராஜன் கூறியது,
    பொதுவாக வடசென்னையில் எந்தச் சாலையும் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. இதற்கு துறைமுக இணைப்புச் சாலைகளும் விதிவிலக்கு அல்ல. மேலும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த வடசென்னை பகுதியிலிருந்து தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல உள்வட்டச்சாலை, வெளிவட்டச் சாலைதான் எளிதாக உள்ளன. இச்சாலைகளின் பெரும்பாலான பகுதி மாநகராட்சி எல்லைக்குள்தான் உள்ளன. ஆனாலும் முறையான விளக்குகள் அமைக்கப்படவில்லை. சாலைகள் ஒழுங்குடன் இருப்பதில்லை. 
தற்போது சுமார் 50 கி.மீ. தூரத்தில் உள்ள தாம்பரத்திற்குச் செல்ல ஏற்கனவே இரண்டு இடங்களில் கட்டணம் செலுத்தும் நிலையில் இனி மூன்று இடங்களில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன நியாயம்? வாடகை கார்களில் சென்றால் சுங்கக் கட்டணங்களையும் பொதுமக்கள்தான் ஏற்க வேண்டிய நிலை உள்ளது. மிகவும் பின்தங்கிய இப்பகுதியில் மூன்று இடங்களில் கட்டணங்களை வசூலிப்பது ஏற்க முடியாது. எனவே இப்புதிய சுங்கச் சாவடியை திறக்கக்கூடாது. அவ்வாறு திறந்தால் அனைத்துத்தரப்பினரையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார். 
      20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட இத்திட்டம் தற்போது பொருந்துமா?  தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com