இதய பாதிப்புடன் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு "பேஸ் - மேக்கர்' கருவி: அரசு மருத்துவர்கள் சாதனை

சீரற்ற இதயத் துடிப்புடன் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை மூலம் "பேஸ் - மேக்கர்'  கருவியை பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சீரற்ற இதயத் துடிப்புடன் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை மூலம் "பேஸ் - மேக்கர்'  கருவியை பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிறந்து 18 நாள்கள் மட்டுமே ஆன குழந்தைக்கு இத்தகைய சவால் நிறைந்த சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பது அரசு மருத்துவமனை வரலாற்றில் இதுவே முதன்முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் குப்புசாமி (30). விவசாயக் கூலியான இவருக்கு கஸ்தூரி (27) என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி தனியார் மருத்துவமனையொன்றில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பொதுவாகவே, பச்சிளம் குழந்தையின் இதயம் நிமிடத்துக்கு 120 முறையாவது துடிக்க வேண்டும். ஆனால், அக்குழந்தையின் இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 50-ஆக மட்டுமே இருந்தது.
இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் அக்குழந்தை சேர்க்கப்பட்டது. அதன் இதய செயல்பாடுகளை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு "பேஸ் - மேக்கர்' கருவியைப் பொருத்த முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 12-ஆம் தேதி குழந்தைகள் இதய அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் ஜி.கே.ஜெய்கரன், மயக்க மருந்தியல் நிபுணர் டாக்டர் ராகவன், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் கமலரத்தினம் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழுவினர் சுமார் 3 மணி நேரம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு 75 கிராம் எடை கொண்ட "பேஸ் - மேக்கர்' கருவியைப் பொருத்தினர்.
அதன் பின்னர் இதயத் துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிறந்து ஓரிரு வாரங்களே ஆன குழந்தைக்கு இதுபோன்ற சிகிச்சைகள் மேற்கொள்வது மிகவும் சிக்கலான காரியமாகும். இருப்பினும், அதனை அரசு மருத்துவர்கள் சாத்தியமாக்கியுள்ளனர். 
இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அரசர் சீராளர் கூறியதாவது: இதயத் துடிப்பு சீராக இல்லாமல் குழந்தை பிறப்பதற்கு மரபணு ரீதியான காரணங்கள் இருக்கலாம். அல்லது வேறு சில காரணங்களால் அத்தகைய குறைபாடு ஏற்படலாம். ஆனால், இந்தக் குழந்தையைப் பொருத்தவரை இயற்கையாகவே அதன் இதயத் துடிப்பு சீரற்ற நிலையில் இருந்தது. இதற்கு உரிய சிகிச்சையளிக்காவிட்டால், குழந்தையின் வளர்ச்சி தடைபடும், மூளை வளர்ச்சி சரிவர இருக்காது; ஒரு கட்டத்தில் மரணம் நேரிடக் கூட வாய்ப்புள்ளது. 50 ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பு ஏற்படுவதுண்டு. கூடுமான வரையிலும் மருந்துகள் மூலமாக அப்பிரச்னையை சரி செய்யலாம். அதிலும் முன்னேற்றம் இல்லாதபட்சத்தில்தான் "பேஸ் - மேக்கர்' கருவி பொருத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
இந்தக் குழந்தைக்கு அத்தகைய அவசியம் எழுந்ததால் அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அக்கருவி பொருத்தப்பட்டது. இந்த வகையான சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை செலவாகும். முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இங்கு இலவசமாக "பேஸ் - மேக்கர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது.
குழந்தையின் இதயத் துடிப்பு தற்போது இயல்பாக இருக்கிறது. அடுத்த சில நாள்களில் குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com