இருளில் சிக்கித் தவிக்கும் துறைமுக இணைப்புச் சாலைகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

சென்னை-எண்ணூர் துறைமுக வளர்ச்சிக்காக விரிவாக்கம் செய்யப்பட்ட துறைமுக இணைப்புச் சாலைகளில் பெரும்பாலான இடங்களில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் இருளில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள்
மாதவரம்-மணலி உள்வட்டச் சாலையில் சுங்கச்சாவடி அருகே இருட்டில் செல்லும் வாகனங்கள். 
மாதவரம்-மணலி உள்வட்டச் சாலையில் சுங்கச்சாவடி அருகே இருட்டில் செல்லும் வாகனங்கள். 


சென்னை-எண்ணூர் துறைமுக வளர்ச்சிக்காக விரிவாக்கம் செய்யப்பட்ட துறைமுக இணைப்புச் சாலைகளில் பெரும்பாலான இடங்களில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் இருளில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 
ரூ.650 கோடியில் சாலை விரிவாக்கத் திட்டம்:   தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னை, எண்ணூர் துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலைகளுடன்  இணைப்பதற்காக ரூ.650 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க சிறப்புத் திட்டம் கடந்த 2011- இல் தொடங்கப்பட்டது. நீண்ட நாள்களாக பணிகள் நடைபெற்று வந்த இத்திட்டம் ஒரு சில இடங்களைத் தவிர, முடியும் தருவாயிலேயே உள்ளது.  இத்திட்டத்தின்படி எண்ணூர் விரைவு சாலை, திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்சட்டி நெடுஞ்சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலை உள்ளிட்ட சாலைகள் ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளன.  மேலும் சாலை விரிவாக்கத்தின்போது வீடுகளை இழந்த சுமார் இரண்டாயிரம் பேருக்கு மாற்றிடம், மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் இத்திட்டத்தின் செலவினங்களை ஈடுகட்டும் வகையில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணங்களை வசூலிக்க உள்வட்டச்சாலையில் மணலி மாத்தூர் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.  செல்வதற்கு நான்கும், வருவதற்கு நான்கும் என எட்டு நுழைவுவாயில்களுடன் அமைக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடி கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. 
பராமரிப்பற்ற நிலையில் சாலைகள்:  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கக் கட்டணம் மட்டும் வசூலிப்பதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் தர்னா, முற்றுகை, வேலை நிறுத்தம் என தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன. எனினும், எதிர்ப்புகளையும் மீறி திட்டமிட்டபடி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடியைத் திறந்து தொடர்ந்து கட்டணங்களை வசூலித்து வருகிறது.   
இந்நிலையில், துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்ட சாலைகளில் சுமார் 70 சதவீத பகுதிகளில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை.  மேலும், சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகிலேயே கும்மிருட்டில் வாகனங்கள் செல்லும் அவல நிலை உள்ளது. அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திருவொற்றியூர், எண்ணூர், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர வேண்டும் என்றால், மிகக் குறைந்த தூரம் கொண்ட இச்சாலைகள்தான் உதவிகரமாக உள்ளதால், அதிக அளவிலான பொதுமக்கள் இச்சாலைகளையே  பயன்படுத்தி வருகின்றனர். 
ஏற்கெனவே கண்டெய்னர் லாரிகளுக்கு மத்தியில் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்,  விளக்குகள் இல்லாததால்   கும்மிருட்டில்  இச்சாலைகளில் அச்சத்துடன்  பயணம் மேற்கொள்கின்றனர்.  
மேலும், சாலைகள் எங்கும் இருபுறமும் மேடு பள்ளங்களாகக் காணப்படுகிறது. எதிரில் வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தைத் தவிர்க்க   கார்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் சாலையோரம் ஒதுங்கும்போது விபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது.   
மேலும், சாலை விதிகள் குறித்த எச்சரிக்கை பலகைகளோ, இரவில் ஒளிரும் எதிரொளிப்பான்களோ பெரும்பாலான இடங்களில் அமைக்கப்படதாதும் முக்கிய காரணமாகும். 
இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.சுகுமார் கூறியது:  இச்சாலைகள் அனைத்தும் ஏற்கெனவே இருந்த பழைய சாலைகள்தான். துறைமுக வளர்ச்சிக்காக இவற்றை விரிவாக்கம் செய்து, நவீனப்படுத்தும் பணிக்காக மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டது.  
இத்திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள், துறைமுக நிர்வாகங்களைத் தவிர தனியார் நிறுவனம் ஏதும் முதலீடு செய்யவில்லை. இந்நிலையில், இத்திட்டத்திற்காக பொதுமக்களிடமும், லாரி உரிமையாளர்களிடமும் கட்டணங்களை வசூலிப்பதில் எந்த நியாயமும் இல்லை. 
இது குறித்து தமிழக முதல்வர் வரை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது வேதனை அளிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com