இன்று வாக்கு எண்ணிக்கை: காவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி, சென்னையில் காவலர்களுக்கு வியாழக்கிழமை (மே 23) சுழற்சி முறையில் பணி
சென்னை ராணி மேரிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பை ஆய்வு செய்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன்.
சென்னை ராணி மேரிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பை ஆய்வு செய்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன்.


மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி, சென்னையில் காவலர்களுக்கு வியாழக்கிழமை (மே 23) சுழற்சி முறையில் பணி வழங்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் வாக்குகளை எண்ணுவதற்கு சென்னையில் 3 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வட சென்னை மக்களவை தொகுதி வாக்குகள் சென்னை ராணிமேரி கல்லூரி மையத்திலும், மத்திய சென்னை தொகுதி வாக்குகள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மையத்திலும், தென் சென்னை தொகுதி வாக்குகள் கிண்டி அண்ணா பல்கலைக்கழக மையத்திலும் எண்ணப்படுகின்றன. 
வாக்கு எண்ணிக்கையையொட்டி,  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராணி மேரி கல்லூரியிலும், அண்ணா பல்கலைக்கழகத்திலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களிலும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் புதன்கிழமை திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு  அறிவுரைகளை வழங்கினார்.  மூன்று வாக்கு எண்ணும் மையங்களிலும் 9 துணை ஆணையர்கள் தலைமையில் 35 உதவி ஆணையர்கள், 91 ஆய்வாளர்கள், 300 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் சுமார் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் சென்னை முழுவதும் 7 ஆயிரம் போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்கள்  பயன்படுத்தப் பட்ட பின்னர் வாக்கு எண்ணும் நாளில் ஒரே ஷிப்ட் முறையில்  காவலர்கள் பணி செய்து வந்தனர். ஆனால், இந்த முறை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளி வருவதற்கும், ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுவதால் காவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதன் மூலம் காவலர்களுக்கு பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளதாகவும்,  கடுமையான பணிக்கு பின்னர் அவர்களுக்கு ஓய்வும் கிடைக்கும் என காவல்துறை உயர் அதிகாரிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com