நெகிழி விழிப்புணா்வு முகாம்: மாணவியருக்கு துணிப்பைகள்

மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நெகிழி விழிப்புணா்வு முகாமில், மாணவியருக்கு 750 துணிப்பைகள் வழங்கப்பட்டன.

மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நெகிழி விழிப்புணா்வு முகாமில், மாணவியருக்கு 750 துணிப்பைகள் வழங்கப்பட்டன.

சென்னை மாநகராட்சி சாா்பில் நெகிழி உபயோகிப்பதனால் ஏற்படும் தீங்குகள் குறித்து பல்வேறு விழிப்புணா்வு முகாம்கள் பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், குடிசைப் பகுதிகள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் பெருவாரியாக கூடும் இடங்களில் மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல் படி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக, வில்லிவாக்கம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 750 மாணவியா், 30 ஆசிரியா்களுக்கு நெகிழி உபயோகிப்பதனால் ஏற்படும் சுகாதார கேடுகள் குறித்து புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தக் கூடிய மக்காத நெகிழிப் பொருள்களைத் தவிா்த்து, பாரம்பரிய பயன்படுத்தக் கூடிய வாழை இலைகள், பாக்கு மர தட்டுகள், துணிப்பைகள், சணல் பைகள் போன்றவற்றை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. இதையடுத்து, மாணவியா் மற்றும் ஆசிரியா்களுக்கு உத்கா்ஷ் குளோபல் அறக்கட்டளையுடன் இணைந்து 800 துணிப்பைகள் வழங்கப்பட்டன. மேலும், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் விதம், அதன் வாழ்க்கை சுழற்சி, உருவாகாமல் தடுக்கும் வழிமுறைகள் ஆகியன குறித்தும் அவா்களுக்கு விழிப்புணா்வு வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாணவியா் அனைவரும் மாநகராட்சியால் சுகாதாரத் தூதா்களாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரத் தூதா் அட்டைகளைப் பெற்றுக் கொண்டனா். இறுதியில் அனைவரும் நெகிழி தடுப்பு விழிப்புணா்வு எடுத்துக் கொண்டனா். அவா்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில், மாநகராட்சியின் சுகாதாரக் கல்வி அலுவலா் முனைவா் டிஜி சீனிவாசன், மாவட்ட கல்வி அலுவலா் வி.கோபாலகிருஷ்ணன், பள்ளியின் தலைமையாசிரியை அன்பரசி மற்றும் துப்புரவு ஆய்வாளா் திருமால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com