மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம்: ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் ரயில் இயக்கத் திட்டம்

மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், மாதவரம்-சிறுசேரி உள்பட 3 வழித்தட பாதை பணிகள் நிறைவடைந்ததும், ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி வசதி மூலம் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம்: ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் ரயில் இயக்கத் திட்டம்

மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், மாதவரம்-சிறுசேரி உள்பட 3 வழித்தட பாதை பணிகள் நிறைவடைந்ததும், ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி வசதி மூலம் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

2025-இல்  இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதி நிறைவடைந்த பிறகு,  ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி வசதி மூலம் ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்து விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல்-பரங்கிமலை ஆகிய இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் விரிவாக்கம் பணி நடைபெறுகிறது. 

இதற்கிடையில், இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. மாதவரம்-சிறுசேரி,  மாதவரம்-சோழிங்கநல்லூர் உள்பட  3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழித்தடத்தில் மொத்தம் 118.9 கி.மீ. தொலைவுக்கு ரூ.85, 047 கோடியில் திட்டப்பணிகள் நடைபெறவுள்ளன. தற்போது மண் ஆய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், மாதவரம்-சிறுசேரி உள்பட 3 வழித்தட பாதை பணிகள் நிறைவடைந்ததும் அங்கு ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி வசதி மூலம் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், முதல் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஓட்டுநர் மூலமாக ரயில்கள் இயக்கப்படுவது தொடரும். இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம், முதல் கட்டத்தை விட வேறுபட்டதாக இருக்கும். 

ஓட்டுநர் இல்லாமல் ரயில் இயக்க சிக்னல் முறை தேவைப்படுகிறது. எனவே, இரண்டு கட்டங்களில் உள்ள ரயில்களை ஒன்றொடு ஒன்று மாற்றம் செய்ய முடியாது. சிக்னல் மென்பொருள் ரயிலின் முழு இயக்கத்தையும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. இரண்டு வழித்தடங்களிலும் மென்பொருள் வேறுபடும். எனவே, இரண்டாம் கட்ட ரயில் இயக்கத்துக்காக வடிவமைக்கப்பட்டதை  முதல் கட்டத்துக்குப் பயன்படுத்தி ரயில்களை இயக்க முடியாது. 

இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியது: 

மாதவரம்-சிறுசேரி வழித்தட பாதையில் இன்னும் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயில் ஓடும். அதிநவீன மென்பொருள், சிக்னல் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் மெட்ரோ ரயில் இயக்கப்படும். 

ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்தை, ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படும். பயணிகள், மக்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும். 

முதல்கட்டத்தில் ரயில் இயக்குவது, நிறுத்துவது, ரயில் கதவை திறப்பது, மூடுவது எல்லாம் ஓட்டுநரால் மேற்கொள்ளப்படுகிறது.  இரண்டாம் கட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் இயக்கம் கட்டுப்படுத்தப்படும். ஏதாவது அவசர காலத்தில் உதவி தேவை என்றால்,

இயக்க கட்டுப்பாட்டு மைய ஊழியர் ரயில் செயல்பாட்டை கட்டுப்படுத்துவார். 
அடுத்த நிலையத்தை அடைந்த பிறகு, கட்டுப்பாட்டாளர் வசம் ஒப்படைக்கப்படும். திறமையான செயல்பாட்டாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று தெரிவித்தனர்.

2025-ஆம் ஆண்டில், இரண்டாம் கட்டத் திட்டத்தின் முதல் பகுதி பணிகள் நிறைவடையும்போது சுமார் 138 ரயில்கள் ஓடும் என்றும், அப்போது 19.2 லட்சம் மக்கள் தினசரி பயணம் மேற்கொள்வார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர,  அடுத்த 30 ஆண்டுகளில் 254 ரயில்களில் 43.5 லட்சம் மக்கள் தினசரி பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com