வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆய்வு
By DIN | Published On : 09th April 2019 02:49 AM | Last Updated : 09th April 2019 02:49 AM | அ+அ அ- |

இராணி மேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்டத் தேர்தல் அலுவலர் ஜி.பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை மாவட்டத்தில், வடசென்னை, மக்களவைத் தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் மையம் சென்னை இராணி மேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து, சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் ஜி.பிரகாஷ், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை மாவட்டத்தில், 475 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை, 157 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப் பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில், வாக்குப் பதிவின் போது பணியாற்றக் கூடிய நுண் பார்வையாளர்களுக் கான பயிற்சி, ரிப்பன் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத் தேர்தல் அலுவலர் ஜி.பிரகாஷ், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் சுதிர் ராஜ்பால், ரஜித்புன்ஹானி, ககன்தீப் சிங், ஷாம்லா இக்பால் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.