மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி மாணவி அதிக மதிப்பெண்: சட்டம் படிக்க ஆசை

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நெசவுத் தொழில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி மாணவி வி. பத்மபிரியா, பிளஸ் 2 பொதுத் தேர்வில்
மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி மாணவி அதிக மதிப்பெண்: சட்டம் படிக்க ஆசை


பத்து ஆண்டுகளுக்கு முன்பு நெசவுத் தொழில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி மாணவி வி. பத்மபிரியா, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600-க்கு 527 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரைப்போல 5-க்கும் மேற்பட்ட மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 500-க்கு மேலும், 20-க்கும் மேற்பட்ட மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 400-க்கும் மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சட்டப்படி 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தக் கூடாது. மேலும் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நெசவுத் தொழில் இருந்து மீட்கப்பட்டவர் வி.பத்மபிரியா. இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த அவர், குடும்பச் சூழல் காரணமாக, பெற்றோருடன் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இவரை மீட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள், குழந்தைத் தொழிலாளர் நலப்பள்ளியில் சேர்த்து பயிற்சி அளித்தனர். பின்னர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த அவர், 500-க்கு 446 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் பிறகு தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் தனியார் பள்ளியில் கணிதப் பிரிவைத் தேர்வுசெய்து படித்த பத்மபிரியா, 2019 பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600-க்கு 527 மதிப்பெண்கள் பெற்று, மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர் மாணவர்களிலேயே முதல் மாணவி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி பத்மபிரியா கூறுகையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளபோதும், சட்டம் படிப்பதே எனது லட்சியம். குடும்பச் சூழல் அதற்கு இடம்கொடுக்குமா என்பது தெரியவில்லை. தன்னார்வலர்கள் உதவி கிடைத்தால், சட்டப் படிப்பிலும் அதற்கு மேலும் சாதனை படைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.
அவருடைய தந்தை வெங்கடேசன் கூறியது: குடும்பச் சூழல் காரணமாக மகளை 2 -ஆம் வகுப்போடு நிறுத்திவிட்டோம். இப்போது அவர் பத்தாம் வகுப்பிலும், பிளஸ் 2 பொதுத் தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்து வருவது பெருமையாக இருக்கிறது. இப்போது அவர் சட்டம் படிக்க விரும்புகிறார். தன்னார்வலர்கள் அவருக்கு தொடர்ந்து உதவ வேண்டும் என்றார்.
இவரைப்போல,  தந்தையுடன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்ட செங்கல்பட்டைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்ற மாணவர் வணிகவியல் பிரிவில் 600-க்கு 507 மதிப்பெண் பெற்றுள்ளார். இப்போது தந்தையை இழந்து நிற்கும் இந்த மாணவர், உயர்கல்வி மேற்கொள்ள உதவியை எதிர்பார்த்துள்ளார்.
சத்தியமங்களத்தில் ஆடு மேய்க்கும் தொழில் இருந்து மீட்கப்பட்ட எஸ்.பவித்ரா என்ற மாணவி, 600-க்கு 503 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர்களைப்போல மேலும் பல மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
100 சதவீத தேர்ச்சி: சில மாவட்டங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
தருமபுரியில் தேர்வெழுதிய 20 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுபோல காஞ்சிபுரத்தில் தேர்வெழுதிய 15 பேரும், விருதுநகரில் தேர்வெழுதிய 22 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்பும் தன்னார்வலர்கள், தமிழக அரசு குழந்தைத் தொழிலாளர் மீட்பு அலுவலகத்தை 044 - 24321407, 24321438 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். 
முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பத்மபிரியாவுக்கு உதவ விரும்புபவர்கள் 90479 89505 என்ற செல்லிடப்பேசியில் அவருடையத் தந்தையைத் தொடர்புகொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com