தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 21st April 2019 04:19 AM | Last Updated : 21st April 2019 05:40 AM | அ+அ அ- |

பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் தங்களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க திங்கள்கிழமை (ஏப்.22) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஏழை பெற்றோரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதையடுத்து கடந்த 2009-ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.அனைத்து தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. சேர்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அந்தச் சட்டம். அதன்படி தமிழகத்தில் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தேவையான ஆவணங்கள்: வரும் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்.22-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பம் செய்பவர்கள் குழந்தையின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும்.
எங்கு விண்ணப்பிக்கலாம்?: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையவழியில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒப்புகைச் சீட்டு அவசியம்: இது தொடர்பாக பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள இடங்களில் இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி மாணவர் தேர்வு செய்யப்படுவர்.