திருவொற்றியூர் குப்பைக் கிடங்கில் 2 நாளாக எரியும் தீ: தீயை அணைப்பதில் அதிகாரிகள் மெத்தனம் என புகார்

திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ, கடந்த இரண்டு நாள்களாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
திருவொற்றியூர் மணலி சாலையில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் இரண்டு நாள்களாக புகை மண்டலத்துடன் கொழுந்துவிட்டு எரியும் தீ.
திருவொற்றியூர் மணலி சாலையில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் இரண்டு நாள்களாக புகை மண்டலத்துடன் கொழுந்துவிட்டு எரியும் தீ.

திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ, கடந்த இரண்டு நாள்களாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தீயை அணைப்பதில் அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவொற்றியூர்-மணலி சாலையில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. திருவொற்றியூர் மண்டலத்துக்கு உள்பட்ட குப்பைகள் இங்கு பல ஆண்டுகளாகக் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை இந்த குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீ பற்றியது. தீ மளமளவென இதர பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் போதிய தண்ணீர் இருப்பில் இல்லாததால் வெள்ளிக்கிழமை இரவு தீயணைப்புப் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மாதவரத்தில் தனியார் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினையடுத்து இப்பகுதியில் உள்ள அனைத்து தீயணைப்பு வாகனங்களும் அங்கு சென்றன.
இந்நிலையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் குப்பைக் கிடங்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.  இதனால் இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. மேலும் பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய சாலை முழுவதும் எதிரே வரும் இருசக்கர வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு புகை பரவியது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புகை காரணமாக கார்கில் நகர், ராஜாஜி நகர், சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களில் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.     இரண்டு நாள்களாக தீ அணைக்கப்படாத நிலையில் சனிக்கிழமை இரவு வரை தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.  
அதிகாரிகள் பரஸ்பரம் புகார்:  இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியது:      
உள்ளாட்சி குப்பை வளாகங்களில் தீ விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி தான் தீயணைப்பு பணியில் கவனம் செலுத்த வேண்டும்.  ஆனாலும் நாங்களும் தீயை அணைக்க உதவுவோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எங்களால் அதிக அளவிலான தண்ணீரை குப்பைக் கிடங்குகளில் ஏற்படும் தீயை அணைக்க பயன்படுத்த முடியாது. இது மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் திருவொற்றியூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க போதுமான தண்ணீரை மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் நாங்கள் தீயணைக்கும் பணியைக் கைவிட்டுவிட்டு பணிமனைக்கு வாகனங்கள் திரும்பி விட்டன. போதுமான தண்ணீரை வழங்கினால் மீண்டும் பணியில் ஈடுபடுவோம் என்றனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலர் முருகன் கூறியது:
மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இதுவரை 16 லாரிகள் தண்ணீர் வழங்கியுள்ளோம். இன்னும் தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இரவுக்குள் தீயணைப்புத் துறையினர் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என நம்புகிறோம் என்றார்.
குப்பை எரிந்து கொண்டிருக்கும் பகுதியிலிருந்து சில மீட்டர் தூரத்தில்தான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது.  இந்நிலையில் எரிவது குப்பைதானே என மெத்தனமாக இல்லாமல் போர்க்கால அடிப்படையில் தீயை அணைக்கும் பணியில் அனைத்துத் துறைகளும் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com