ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனு தள்ளுபடி

ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவுக்கு எதிரான சீராய்வு மனு தள்ளுபடி

பக்கிங்ஹாம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உயர்

பக்கிங்ஹாம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உயர்
நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
சென்னை, ராஜஅண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் பக்கிங்ஹாம் கால்வாயின் தெற்கு பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், தங்களை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தக்கூடாது எனவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், தங்களது குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுவதாகக் கூறி அந்த பகுதியில் வசித்து வரும் 90-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த பகுதியில் வசித்து வருபவர்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட்டது. மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு வேறு எந்த கரிசனமும் காட்டக்கூடாது. ஒருவேளை ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்ய மறுத்தால், மின்சாரம், குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும். அனைவரின் குடும்ப அட்டைகளைத் திரும்ப பெற வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கக்கூடாது. குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு செய்யும் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு மட்டும் குடும்ப அட்டை உள்ளிட்ட சலுகைகளை மீண்டும் வழங்கவும், மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை வழங்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி குடியிருப்பு வாசிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி குடியிருப்பு வாசிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர்  கொண்ட  அமர்வில்  அண்மையில் விசாரணைக்கு வந்தது. 
அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்து 40 முதல் 50 அடி தூரம் தாண்டியே வசித்து வருகின்றனர். 
குடியிருப்புப் பகுதி அமைந்துள்ள இடம் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானது அல்ல. 
குடிசைமாற்று வாரியத்துக்குச் சொந்தமானது. மனுதாரர்கள் குடிசைமாற்று வாரியத்தின் அனுமதி பெற்றே பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர். எனவே இது ஆக்கிரமிப்புப் பகுதி என்ற எல்லைக்குள் வராது என வாதிட்டார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் நர்மதா சம்பத் பதிலளித்து வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக ஏற்கெனவே இந்த நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் எந்த தவறும் இல்லை. எனவே இந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே நேரம் அந்த பகுதியில் குடியிருந்து வரும் குடியிருப்பு வாசிகள் வரும் ஜூன் 10-ஆம் தேதிக்குள் குடிசை மாற்று வாரியம் ஒதுக்கும் இடத்துக்கு இடமாறிக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com