நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் குளறுபடி: மாணவர்கள் குழப்பம்
By DIN | Published On : 26th April 2019 04:43 AM | Last Updated : 26th April 2019 04:43 AM | அ+அ அ- |

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டுகளில் தவறான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
இதையடுத்து, அந்த ஹால் டிக்கெட்டுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 5-ஆம் தேதி நடக்கிறது.
தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும் அந்தத் தேர்வில் பங்கேற்பதற்கு நாடு முழுவதும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜ்ஜ்ஜ்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் / ஜ்ஜ்ஜ்.ய்ற்ஹய்ங்ங்ற்.ய்ண்ஸ்ரீ.ண்ய் இணையதளங்களில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு, பாதுகாப்பு குறியீடு கொடுத்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தனர்.
அதில் சில குளறுபடிகள் இருந்ததாகத் தெரிகிறது. மதுரையைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் ஹால் டிக்கெட்டில் தேர்வு மையத்தின் பெயர் "புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தியாகராஜா நகர், திருநெல்வேலி, மதுரை, தமிழ்நாடு' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபோன்று சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டில் குளறுபடி நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
இதையடுத்து, பிழை உள்ள ஹால் டிக்கெட்டுகளை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பிழைகள் சரிசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.